Friday, December 30, 2011

முடிந்த பிறகும்

1-

காதலில்லாமல்
பேசிச் செல்வாயா
கேட்கிறாய்

மழையிடம்
நனையாமல்
அழைத்துச் செல்வாயா
என்று கேட்பது
போலிருக்கிறது

2-

எதுவுமில்லாத
என்னிடமிருந்து
எல்லாம் எப்படி
பெற்றாய் நீ

3-


மழையைப் போல்
சிரிக்கிறாய்
அன்பிம் ஈரம்

4-

உரையாடல்
முடிந்த பிறகும்
கேட்டுக்கொண்டே இருந்தது
உன் குரல்

Wednesday, December 28, 2011

இந்த வரிகள்

அடிக்கடி கார்துடைத்து
கை நீட்டாமல்
தருவதை வாங்கிப்போகும் சிறுவனை
சிக்னலில் நிற்கும் கணங்களில்
கவனித்திருக்கிறேன்

எனக்கும்
தாய் தந்தை உண்டு
எங்கிருக்கிறார்கள்
என்ன ஆனார்கள் என்று
தெரியாது

அவன் வந்துபோகும்
ஒவ்வொரு முறையும்
இந்த வரிகளும்
வந்துபோவதுண்டு

அப்பாவின் கடிதம்

வயதும் முதுமையும்
வந்து சேர்ந்த நோயும்
படுக்க வைத்துவிட்டதை
வருத்தமாய்
சொன்னதே இல்லை அப்பா

நகைச்சுவை இழையில்
எல்லோரையும்
கட்டிப்போட்டு விடுவார்

இன்று வந்த
அப்பாவின் கடிதம்
இப்படி முடிந்திருந்தது

மீண்டும் குழந்தையாகி
நடக்கப் பழகுகிறேன்

குறுஞ்செய்திகள்

1-

என்னதான்
வார்த்தைகளிலும் வரிகளிலும்
இறக்கிவைத்தாலும்
மீந்து போகவேச் செய்கின்றன
பிரியங்கள்

2-

இந்த தேநீரும்
இதற்கு முன்பு
குடித்த தேநீரும்
சுவையில் கொஞ்சம்
வித்தியாசப்படுகின்றன
உன் அடுத்தடுத்த
குறுஞ்செய்திகளைப்போல

Monday, December 26, 2011

முத்தம் மட்டும்

கை நீட்டுகிறது குழந்தை
ஒன்றுமில்லை
உள்ளங்கையில்
முத்தம் மட்டும்
வைக்கிறேன்
பெரும் சந்தோஷத்துடன்
ஓடுகிறது
உலகைக் கொண்டு
செல்வதைப் போல

Wednesday, December 21, 2011

வீடு

இடம் பெயர்ந்து வந்தாலும்
நினைவில்
குடியிருந்த வீடு

Tuesday, December 13, 2011

மேலும்

நிசப்தமான இரவை
மேலும் அமைதியாக்குகிறது
உன் நினைவு

Sunday, December 11, 2011

நடக்கிறேன்

இந்த மழையைப் போலவே
நனைக்கிறது
தூரத்திலிருந்து
வரும் பாடலும்
நடக்கிறேன்
குளிரின்றி

Saturday, December 10, 2011

உன் கனவிலிருந்து

நம் பேச்சுக்கிடையில்
வந்து போகும்
பட்டாம் பூச்சி
என் கனவிலும்
வந்தது

எங்கிருந்து
வருகிறாய் என்றேன்

உன் கனவிலிருந்து
என்றது

எனக்கென்ன
கொண்டு வந்தாய்
எனக் கேட்டேன்

கேள்வியைத் தட்டி விட்டு
கொஞ்சம்
வண்ணம் இறைத்தபடியே
ஓடிப் போனது

பூவை வரைதல்

எதுவும் பேசாமல்
ஒரு பூவை வரைந்து
என் கையில்
கொடுத்துவிட்டுப் போகிறாய்

மெல்ல அது
வாசம் வீசத்
தொடங்குகிறது

ஆச்சர்யத்துடன் பார்க்க
பூந்தோட்டமாகிறது

சுற்றி ஓடுகிறேன்
ஓய்வின்றி

தேன் ருசிக்கிறேன்
எல்லையின்றி

Saturday, December 3, 2011

வாசிப்பு

தூரத்திலிருந்து
வரும் வாசிப்பு

எப்படித்தான்
வாசிக்கும் உருவத்தை
வரைந்து பார்க்க
முயற்சித்தாலும்
அது மாறி விடுகிறது

புல்லாங்குழலாகவே

பறவைப் போல

பறவைப் போல
வந்து சென்றாய்
நீ விட்டுச் சென்ற இறகு
காட்டியது வானத்தை

Friday, November 25, 2011

தெரிகிறது

உன் பெயரையும்
என் பெயரையும் சேர்த்து
எழுதிப் பார்க்கிறேன்
பாடலின் பல்லவியைப் போல
அழகாகத் தெரிகிறது

ஊர்

ஊரிலிருந்து கிளம்பும்போது
வருகிறேன் என்கிறது
ஊரும்

ஒரு முறை

நள்ளிரவில் தற்கொலை
செய்துகொள்ளப் போகிறவன்
கடைசியாக
ஒரு முறை பார்க்கிறான்
நட்சத்திரங்களை

Monday, November 7, 2011

அவர்

பல வருடங்களாக
பக்கத்து வீட்டிலிருந்தவர்
அறிமுகமானார்
பிணமாகப் போனபோது

Sunday, November 6, 2011

நானும்

சிந்தி வழியும்
உன் சிரிப்பில்
நனைகிறது பூமி
நானும்

உனது சவப்பெட்டி

கதையின் முடிவுபடி
நீ இறந்திருக்க வேண்டும்
உயிரோடு இருக்கிறாயே எப்படி
உன் கதையை
உனது சவப்பெட்டியில்
புதைத்து விட்டு
நான் தப்பித்து விட்டேன்

Friday, November 4, 2011

புல்லாங்குழல்

நன்றாக வாசிக்கிறான்
விற்கும் சிறுவன்
அதற்காக ஒன்று
வாங்கிக் கொண்டேன்
எனக்கு வாசிக்கத் தெரியாத
புல்லாங்குழலை

பொம்மைகள்

வீடு நிறைய பொம்மைகள்
கவலையுடன்
ஊருக்குப் போயிருக்கிறாள் குழந்தை

Thursday, November 3, 2011

பூங்கொத்து

உனக்கு நான்
அனுப்பி இருப்பது
உன் புன்னகையில்
செய்த பூங்கொத்து

போதும்

ஆகாயம் வரைந்தால் போதும்
மழை பெய்யும்
சொல்கிறாள் குழந்தை

Monday, October 31, 2011

இருள் பிளந்து

கைபற்றி
ஒளிகாட்டிச் செல்லும்
மெழுகுவர்த்தியிடம் கேட்டேன்

போய் சேர்வதற்குள்
அணைந்து போவாயா

சுடரசைத்துச் சொன்னது

அதனாலென்ன

முதலில்
உன் பயம் அணை

ஒரு போதும் உருகாது
உன் சாலை
போய் சேர்
இருள் பிளந்து

Wednesday, October 26, 2011

விடவே இல்லை

அப்பாவின்
கைபிடித்து
நடக்கக் கற்றுக்கொண்ட பின்
விடவே இல்லை
வழியின்
கைபிடித்து நடக்க

மேலும்

உடைந்த கனவின்
ஒருபுறம் நீ

மேலும்
உடைத்துக்கொண்டு

மறுபுறம் நான்

மேலும்
உருவாக்கிக்கொண்டு

Tuesday, October 25, 2011

ஒவ்வொன்றும்

மழைத் துளி
விழுவது போல
உன் கவிதையின்
முதல் வார்த்தை

மழை நதியாகி
ஓடுவது போல
உன் கவிதை வரிகள்
ஒவ்வொன்றும்

Saturday, October 22, 2011

சொல்லமாட்டேன்

1-

இமைகளுக்கிடையில் நீ
பூத்திருக்கிறாய்
இதை கண்ணீர் துளி என்று
சொல்லமாட்டேன்

2-

தேநீர் அருந்தியபடியே
மழையை ரசித்தேன்
பிறகு
மழையை அருந்தியபடியே
மழையை ரசித்தேன்

3-

உனது குறுஞ்செய்தியைப்
படிக்க ஒரு சுவை
தொட்டுப் பார்க்க
பல சுவை

4-

ஒன்றுமில்லாது தொடங்கும்
இந்த கவிதை
ஒன்றுமில்லாது
முடியப் போவதில்லை

Thursday, October 20, 2011

அப்படியேதான் இருக்கிறது

1-

அப்படியேதான் இருக்கிறது
அழுக்கு
வார்த்தைகளால்
சலவை செய்யப் பார்க்கிறீர்கள்

2-

பேசிப்போனவரின் சொற்கள்
நாய்க்குட்டியைப் போல
வாஞ்சையுடன்
சுற்றி சுற்றி வருகின்றன

3-

இது போன்ற
பதில்கள் தேவையில்லை
என்றால்
இது போன்ற கேள்விகளைத்
தவிர்த்து விடுங்கள்

Tuesday, October 18, 2011

அசைத்தல்

நான் வானத்தை அசைக்கிறேன்
நட்சத்திரங்கள்
விழுகிறதா பாருங்கள்
சொன்னாள் சிறுமி

அப்போது அவள் அசைத்த
மரத்திலிருந்து விழுந்தன

சில பழங்களும்
கூடவே
நட்சத்திரங்களும்

இல்லாத பழம்

இல்லாத பழத்தை எடுத்து
ஒவ்வொரு சுளையாய் உரித்து
தின்கிறாள் சிறுமி
இருக்கும் தன் பசிக்கு

பசியை வெற்றிகொள்ள
ஒவ்வொரு முறையும்
தோற்றுப் போகாத
இந்த பாவனையை
செய்தபடி இருக்கிறாள்

அப்பா வீடு திரும்ப
இன்னும் நேரமிருக்கிறது

Sunday, October 16, 2011

ஒரே ஒரு காரணம்

என்னைத் தவிர்ப்பதற்கு
ஆயிரம் காரணங்கள்
வைத்திருக்கிறாய்
ஒரு வேண்டுகோள்
ஆயிரம் காரணங்களையும்
தவிர்ப்பதற்கு
ஒரே ஒரு காரணம்
கண்டுபிடியேன்

Tuesday, October 11, 2011

உன் மேஜையில்

உன் மேஜையில்
நீண்ட நாட்களாக
படிக்கப்படாமல்
இருக்கும் புத்தகத்தைப் போல
உன் இதயத்தில்
நீண்ட நாட்களாக
பார்க்கப்படாமல்
இருக்கிறேன் நான்

Monday, October 10, 2011

வழிப்போக்கன்

1-

மழை இறங்கும்
கனவில்
நீ போகிறாய்
நனையாமல்

2-

எங்கோ தொலைந்த
நதி
ஈரம் மறக்காத
மணல்

எங்கோ தொலைந்த
நீ
பாரம் இறக்காத
நான்

3-

உன் வழிகளில்
நடந்து கொண்டிருக்கும்
நானொரு
வழிப்போக்கன்

Wednesday, October 5, 2011

கோடுகள்

வெறும் கோடுகள் மட்டுமே
வரையத் தெரிந்தவனை
அவர்கள் ஓவியன் என்றார்கள்

பிறகு அவனை
வரையச் சொன்னார்கள்

கோடுகளுக்கிடையில்
ஓவியங்கள் இருக்கின்றன
பாருங்கள் என்றான்

அவர்கள் கோடுகளில்
தேடிக்கொண்டிருந்தார்கள்

அவன் கோடுகளில்
தாவிக் கொண்டிருந்தான்

Tuesday, October 4, 2011

வரியின் மேல்

இந்த வரியின் மேல்
பூத்திருக்கிறது பூ

முளைத்திருக்கிறது
பனித்துளி

வளர்ந்து கொண்டிருக்கிறது
கவிதை

கை பிடித்து

1-

மழலையால்
மொழியை அழைக்கிறது
குழந்தை

2-

தொலைந்த குழந்தை
மெல்ல அழுகை நிறுத்தி
நடக்கிறது
நகரத்தின்
கை பிடித்து

Friday, September 23, 2011

வலி

1-
பயண ஜன்னல்
நினைவுகளைப் போல
கடந்து போகும் மரங்கள்
2-
துண்டிக்கப்பட்ட உணர்வில்
கசிகிறது வலி
ரத்தம் போல

Thursday, September 15, 2011

தூரம்

வந்து சேர்ந்த பின்னும்
நமக்கிடையில்
உள்ள தூரத்தைக்
கடந்து கொண்டிருந்தோம்

உனது பெயர்

உன் பெயரை
ஊதிப் பார்க்கிறேன்
பூக்களாக

உதிர்ந்த பூக்களை
கோர்த்துப் பார்க்கிறேன்
உன் பெயராக

Tuesday, September 6, 2011

தாஜ்மஹாலும் காதல் மனைவியும்

தாஜ்மஹால் அருகில் நின்று
புகைப்படம்
எடுத்துக் கொள்ளவேண்டும் என்று
காதல் மனைவி அடிக்கடி
கோரிக்கை வைக்கிறாள்
கண்ணைக் கசக்குகிறாள்
போட்டோ ஸ்டுடியோவில்
தாஜ்மஹால் இருக்கும்
போய் எடுத்துக் கொள்ளலாம் என்றால்
கேட்க மாட்டேன் என்கிறாள்
ஆக்ராதான் போக வேண்டும்
என்று அடம் பிடிக்கிறாள்

கடந்து போனவர்கள்

நடந்த போது
எத்தனையோ பேர்
கடந்து போனார்கள்

அவர்களுக்கு
நானும் ஒருவனாகத்தான்
அப்படிப் போயிருப்பேன்

வார்த்தைகள்

வந்து சேராமல்
அங்குமிங்குமாய்
பாதரசம் போல் உருள்கின்றன
வார்த்தைகள்

Wednesday, August 31, 2011

ஒரு வரி

உன் கூந்தலின்
நீளத்திற்காவது
ஒரு வரி பேசேன்

Monday, August 29, 2011

வேர்கள்

கண்ணாடியில்
மழை வேர்கள்
பூக்கிறது வானம்

Sunday, August 28, 2011

பறந்து போனவை

உனது வாசலில்
இப்போது பறந்து போனவை
பட்டாம் பூச்சிகள் அல்ல
எனது வார்த்தைகள்

Wednesday, August 24, 2011

இல்லை

நீ இல்லை
தலையணை ஓவியங்கள்
தூங்கவில்லை

Monday, August 22, 2011

பூங்கொத்து

நினைவில்
பூங்கொத்து வைத்துப்போனது
யாரென்று தெரியவில்லை

Saturday, August 20, 2011

புன்னகை

அடுத்து புன்னகைப்பாய்
என்று காத்திருக்கிறேன்
உன் முகத்தின் கடுகடுப்பை
அந்த புன்னகை
அழித்து விடலாம்

Thursday, August 18, 2011

சிறுமி

கை நீட்டும் சிறுமி
பசி மறக்கிறாள்
கார் பெண்ணின் காதில்
ஆடுவதைப் பார்த்து

Wednesday, August 17, 2011

திரவ ஆயுதம்

1-

நினைவின் வலி
கண்ணோரம் துளி

2-

வார்த்தைகளை
அடுக்கி வைத்தேன்
படியேறிப் போனது
கவிதை

3-

பல நூறு
சந்திப்புகளான பின்னும்
அணையவில்லை
ஒற்றைப் பிரிவின் நெருப்பு

4-

ஆரம்பித்தபோது
இது கண்ணீர்

இப்போது
திரவ ஆயுதம்

Monday, August 15, 2011

வரி

ஒற்றைத் துளிக்குள்
உறங்கும் கடல்

வரியைத்
தள்ளிச் சென்றது
அடங்காத அலை

Saturday, August 13, 2011

என்ன செய்ய

1-
கிளம்பும் ரயில்
நிற்பவர்களை எண்ணும்
சிறுமி
2-
அதிகாலை
பால் போடும் சிறுவன்
ரகசியமாய் பாடுகிறான்
3-
அழித்த பின்னும்
அழியவில்லை
மனதில்
4-
கண்ணீர் போல வந்த வரி
புன்னகைப் போல
பதிந்து போனது
5-
பிஞ்சு மழலையில்
தொலைந்து தொலைந்து
திரும்பும் தாய்
6-
அன்பின் நடனம்
நாயின்
வாலாட்டுதலில்
7-
பாரம் சுமந்தவன்
குரல் சுமக்கும்
துயரம்
8-
அதிகாலை கோலம்
வணக்கம் சொல்லிச்
செல்கிறேன்
9-
வயிற்றிலேயே
தாலாட்டுகிறாள்
வளரும் குழந்தையை
10-
எல்லாம் மறந்தாயிற்று
நினைவுகளில் சேர்த்து
என்ன செய்ய
11-
கரை ஒதுங்கிய பிணம்
பார்த்துப் போகின்றன
நடை பிணங்கள்

Thursday, August 11, 2011

கடவுச் சொல்

நான் திறப்பதுமில்லை
மூடுவதுமில்லை
எனக்கான
கடவுச் சொல் என்று
எதுவுமில்லை

காலங்கள்

இது இலையுதிர் காலம் என்றாள்
கையிலிருந்த இலைகளை
வருடியபடி

இல்லை வசந்த காலம் என்றேன்
அவள் கண்களிலிருந்த
பூக்களைப் பார்த்தபடி

Tuesday, August 9, 2011

ஒற்றைச் சொல்

ஒற்றைச் சொல்லோடு
முடிகிறது
நெடுங் கவிதை

படிக்க படிக்க
ஒவ்வொன்றாய் சொல்லும்
பெருங் கவிதையாய் விரிகிறது
ஒற்றைச் சொல்

மறைத்தல்

பிரிந்த போது
மறைத்துக் கொண்டோம்

உன் கண்ணீர்த் துளியை
நானும்

என் கண்ணீரை
நீயும்

Sunday, August 7, 2011

யாரேனும்

கணிப்பொறியில்
கழிகிறது காலம்
என்று தொடங்கும்
அல்லது முடியும்
கவிதையை
யாரேனும் எழுதக்கூடும்

அன்பின் மொழி

1-

குவிந்து கிடக்கும்
உன் அன்பில்
ஒளிந்து கிடக்கும் என்னை
எப்படி விடுவிக்க

2-

நீ போன பின்
நின்றது மனது
ஓடுகிறது காலம்

3-

சொட்டு சொட்டாய்
உன் அன்பு
விழக் கண்டேன்

மொட்டு மொட்டாய்
என் இதயம்
பூக்கக் கண்டேன்

4-

விரல்கள் பேசும்
குறுஞ் செய்திகளின்
மொழி

Saturday, August 6, 2011

போல

சைத்தானைப் போல
உன் நினைவுகள்
துன்புறுத்துகின்றன

கருணை மிக்க
தேவதையைப் போல
தாலாட்டவும் செய்கின்றன

Thursday, July 28, 2011

முடிதல்

நீண்ட அழுகையில்
முடிந்திருந்தது
கண்ணீர் மட்டுமே

Friday, July 22, 2011

இடைவெளி

1-

உனது சொற்களில்
நீ நிரம்பி
வழிகிறாய்

2-

எனக்கும் உனக்கும்தான்
இடைவெளி

எனக்கும்
என்னுள் இருக்கும்
உனக்குமல்ல

Monday, July 18, 2011

சொற்கள்

சுவையான உரையாடல்
தேநீர் தந்த
சொற்களுடன்

Sunday, July 10, 2011

கோடுகள்

கோடிட்ட இடங்களை நிரப்ப
வார்த்தைகள் இல்லை
நிரப்புகிறேன்
கோடுகளாலேயே

எளிது

என்னைத் திறப்பது
எளிதானது
உள்ளிருந்து
நீ வந்தால்
போதும்

ரயில்கள்

எந்த ரயிலும்
இங்கு நிற்பதில்லை

எல்லா ரயிலிலும்
நீ இருக்கிறாய்

Saturday, June 25, 2011

நீந்தும் முத்தம்

தலையணையில் நீந்தும் முத்தம்
என்று நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு
அன்பு முத்தங்கள் என்று
பதில் அனுப்பி இருந்தாய்

நீந்திய முத்தம் மீனானது
தலையணை மீன்தொட்டியானது

எழுதுதல்

எனக்குத் தெரியும்
உன் மெளனத்தில்
என்னைப் பற்றிய குறிப்புகளை
எழுதிக் கொண்டிருக்கிறாய்

Tuesday, June 21, 2011

கட்டளை

அப்பாவின்
கட்டளைகள் மேல்
ஏறி விளையாடும் குழந்தை

அன்பின் நிறம்

குதித்து குதித்து
எல்லோரையும்
கூட்டி வந்து காட்டிய
குழந்தையின்
வானவில்லில் இருந்தது
அன்பின் நிறமும்

Wednesday, June 1, 2011

வழியே

சொற்கள் கூடிக்கிடக்கும்
உன் மெளனத்தின் வழியே
போய் வருவது
கடினமாக இருக்கிறது

திரும்புகிறேன்

என் தயக்கம்
பிடித்திருக்கிறது என்றாய்

எதையும் சொல்லாமல்
திரும்புகிறேன்

பிரிவின் வலிகள்

பிரிவின் வலிகளுக்கு
சந்திப்புகள் மருந்தாகிறது என்றேன்

சந்திப்பும்
ஒருவித வலி
எனச்சொல்லி சிரிக்கிறாய்

Sunday, May 29, 2011

சந்தேகம்

சந்தேகத்தை
தீர்த்துக்கொண்டவன்
சொன்னான்

புறா ரத்தம்
வெள்ளையாக இல்லை

கண்களிலிருந்து

1-

தூறல் போன வீதியில்
அழியாமல் உன்
காலடித் தடங்கள்

2-

மெளனம்
உற்றுப்பார்க்கிறது
உன் கண்களிலிருந்து

இருக்கிறது

பத்திரமாய் இருக்கிறது
என்னிடம்
நீ எடுத்துச் செல்லாத
அன்பு

Friday, May 27, 2011

பட்டாம் பூச்சி

நீ பேசும்போதெல்லாம்
உன் வார்த்தைகளில்
வந்து அமரும்
பட்டாம் பூச்சி
நான் பேசும்போதெல்லாம்
பறந்து போய்விடுகிறது

எது என்று

வானம் பார்த்து
தெரிந்துகொண்டதை
பூமி பார்த்து
புதைத்துவிட்டேன்
வளரும் வேளை
தெரிய வரலாம்
எது என்று
எனக்கும்

Friday, May 20, 2011

அம்மா

அம்மா தன் பசியால்
செய்த உணவை
எங்களுக்கு பரிமாறுகிறாள் என்று
நாங்கள் தெரிந்துகொள்ள
பல வருடங்களாயிற்று

அழைக்கும் பெண்

கண்களால்
அழைக்கும் பெண்
கண்களில் வைத்திருக்கிறாள்
நமக்கான காமத்தையும்
அவளுக்கான பசியையும்

Wednesday, May 18, 2011

நானாகிறேன்

கனவிடம் சொன்னேன்

நீ நதியாகு
நான் படகாகிறேன்

பிரியமான கனவு சொன்னது

இரண்டுமே நானாகிறேன்
நீ பார்த்து ரசி

பார்த்ததில்லை

காலை முதல்
மாலை வரை
இஸ்திரி போடுபவர்
கை நின்று
பார்த்ததில்லை

மற்ற வேளைகளில்
அவர் கால் நின்றும்
பார்த்ததில்லை

வார்த்தைகள்

எடுப்பவர்க்கு பழமாய்
மிதிப்பவர்க்கு முள்ளாய்
இறைந்துகிடக்கும்
வார்த்தைகள்

அவள்

கடவுள் திருக்கல்யாணம்
கை நீட்டி
அட்சதைப்போடுவது போல்
பாவனை செய்கிறாள்
முதிர்கன்னி

என்னையும்

விதைத்துப்போனவள்
அறுத்துப்போனாள்
என்னையும்

துருப்புச்சீட்டு

தன் கண்ணீரை
துருப்புச்சீட்டாக்கி
எல்லாவற்றையும்
பெற்றுவிடும் குழந்தை
சிரிக்கிறது
கடைசியில்

Saturday, April 30, 2011

சூயிங்கம் மெல்லும் பெண்

1-

ஆல்பத்தில்
ஓட்டிவைக்கப்படும்
நினைவுகள்

2-

பஸ் வரவில்லை
நிறுத்தத்தில்
சூயுங்கம் மெல்லும் பெண்

3-

தையல் மெஷினில்
அம்மா தைத்துக்கொண்டதே இல்லை
கிழிந்துபோன காலத்தை

Sunday, April 24, 2011

தீண்டுதல்

மனதின் வார்த்தைகளை
உன் மெளனத்தால்
தீண்டுகிறாய்
பூக்கிறது
சொற் குளம்

Friday, April 22, 2011

சிறு மனசு

1-

உன் காதல் பெருமழையில்
அடித்துப் போனதடி
என் சிறு மனசு

2-

பிடிக்கும் போதெல்லாம்
கைதட்டிப் போகின்றன
உன் குரலில் பறக்கும்
பட்டாம் பூச்சிகள்

Saturday, April 16, 2011

நீ

முன்தயாரிப்புகளோடு வந்திருக்கிறாய்
அது தெரியாமல்
உன் நிராகரிப்பை
மறுபரிசீலனை செய்ய
வேண்டுகிறேன்

Saturday, April 2, 2011

இரண்டு பதிவுகள்

1-

ஊர் திரும்பும்போதெல்லாம்
உள்ளிருக்கும் ஊரும்
தெம்பு பெறும்

2-

வாடவே இல்லை
ஸ்கீரின் சேவரில்
மலர்ந்த பூ

Monday, March 28, 2011

இதுவும்

நின்றுகொண்டிருக்கிறது மழை
இதுவும் பெய்வதுபோலவே
அழகாக இருக்கிறது

வரிசை

வரிசையாக
உன் பெயரையே
எழுதி வைத்திருக்கிறேன்
படிக்க படிக்க
அதுவே அமைத்துக்கொடுக்கிறது
வாக்கியங்களை

Saturday, March 26, 2011

அம்மாவின் முகங்கள்

1-

எல்லோரும் சாப்பிட
எதுவுமில்லாத அம்மாவுக்கு
சமையலறையே உணவாகும்
பல நேரம்

2-

அப்பாவின் சட்டையைப்
போட்டுக்கொண்ட குழந்தை
அப்பாவைப்போல
மிரட்டுகிறது அம்மாவை

அம்மா விளையாட்டாய் பயப்பட
அப்பாவுக்குள்ளிருந்து
வெளிவரும் குழந்தை
அணைக்கிறது அம்மாவை

Thursday, March 24, 2011

இசை

உன் மெளனம்
நுகர
உணர்கிறேன் இசை

அழகாய் வரும்

தூறல்கள்
ஒவ்வொன்றும்
வார்த்தைகள்
எப்படி எழுதினாலும்
அழகாய் வரும்
மழை

Wednesday, March 16, 2011

புது வீடு

புது வீட்டுக்கு குடிவந்தவர்கள்
சுவரை முத்தமிட்டு
பெயர் எழுதும் குழந்தை

Monday, March 14, 2011

ரகசிய நதி

1-

கண்ணீரின் அடியில்
ஓடுகிறது
ரகசிய நதி

2-

குடைக்குள் போனாலென்ன
நனைக்கிறது
மழைச் சத்தம்

3-

வேகமாக வரைகிறாள்
குழந்தை
நத்தையை

4-

உன் கனவை
என்னால்
உடைத்து விடமுடியும்

வீணாக
கனவு காணாதீர்கள்

Saturday, March 12, 2011

ரப்பர் வார்த்தைகள்

நீங்கள் அழுத்திப் பார்க்கும்போது
அசைந்துகொடுக்கிறது என்பதற்காக
இந்தக் கவிதையை
உச்சியில் கொண்டுபோய்
வைத்துவிடாதீர்கள்

எல்லாமே
ரப்பர் வார்த்தைகள்

Monday, March 7, 2011

முதல் முறை

1-

ஐஸ் கிரீம்
உண்ணும் குழந்தை
வழியும் அழகு

2-

பிரம்பில் கண்டிப்பு
கண்டிப்பில் அன்பு
இதை கூட்டினால்
எங்கள் கணக்கு ஆசிரியர்

3-

என்னைத் தேடாதீர்கள்
இந்த பனித்துளியோடு
மறைந்துகொண்டிருக்கிறேன்

4-

வானவில்
எத்தனை முறை பார்த்தாலும்
முதல் முறை
பார்ப்பது போல

Sunday, March 6, 2011

குழந்தையின் படிகள்

குழந்தை
வரைந்த படிகளில்
எல்லோரும்
மாடிக்குப் போய்
வந்தார்கள்
குழந்தை
வானம் போய்
வந்தது

Saturday, March 5, 2011

நான்தான்

உன் மொத்தப்
பிரியங்களையும்
ஒற்றைப் புன்னகையில்
சொல்லிவிட்டுப் போகிறாய்
நான்தான்
வனத்தில் தொலைந்த
குழந்தையாய்
வார்த்தைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்

உலகு

1-
உன் துளி
அன்பில்
ஒளிரும்
என் உலகு

2-

நுனி நாக்கில்
உன் பெயர்
உடலெங்கும்
உன் வேர்கள்

3-

பேனா வழியே
இறங்கிக்கொண்டிருக்கிறாய்
நீ

Thursday, March 3, 2011

இப்போது

நட்பை
முறித்துக்கொண்டுபோன
நண்பனுக்கு
இன்று பிறந்த நாள்

அவனுக்காக
நான் எழுதிய
வாழ்த்து அட்டை
மேஜைமேல்

படிக்கிறேன்
அவன் வாங்கி
படிப்பதைப்போன்று

உதிரும் இந்த
கண்ணீர் துளிக்கு
எதுவும் தெரியாது
என்பது மட்டுமே
இப்போது
எனக்குத் தெரியும்

Wednesday, March 2, 2011

தருணங்கள்

நீ தந்துவிட்டுப்போன தருணம்
தந்துகொண்டிருக்கும் அன்பை
உணர்ந்துகொண்டிருக்கிறேன்
ஒவ்வொரு தருணத்திலும்

Friday, February 25, 2011

உனது அதிர்வுகள்

1-

மொழி கலப்பில்லாத
மெளனத்திலிருக்கிறது
கவிதையின் மொழி

2-

நீ தந்து சென்ற வலி
தள்ளும்போதெல்லாம்
சாய்ந்து விடுகிறேன்
உன் நினைவின் மீது

நீங்கள்

இந்த அரங்கில்
முக்கியமாக
கருதப்படும் நீங்கள்
என்னைத் தவிர்க்கவே விரும்புகிறீர்கள்

இருந்தும்
ஒரு கணம்
பார்த்துவிடுகிறீர்கள்

அதிலிருந்து மீள்வதற்குதான்
உங்களுக்கு
நிறைய கனங்கள் தேவைப்படுகிறது

கூடவே
உங்கள் எச்சரிக்கை உணர்வின் மீது
கோபமும் வருகிறது

மூதாட்டி

யார் துணையுமின்றி
கைத்தடியால் தன்னை
அழைத்தபடி
கவனமாய்த் தண்டவாளத்தைக்
கடந்து விடுகிறாள் மூதாட்டி

தொடர்ந்து செல்லும்
ரயிலிலும்
பயணிக்கிறாள்
தன்னைப் பார்த்து
கையசைத்தபடி

தகவல்

காமத்தில்
சிக்கிக்கொண்ட
காதலை
வந்தெடுக்க
உதவுவாய் என
காத்திருக்கிறேன்

போகிறாய்
சதிகாரி
தள்ளிவிட்டது
நான்தான் என்ற
தகவலைச் சொல்லி

Tuesday, February 22, 2011

இருக்கிறேன்

தனியேதான்
இருக்கிறேன்

தனிமையோடுதான்
இருக்கிறேன்

அதனாலென்ன
இருக்கிறேன்

Monday, February 21, 2011

துளிர்த்தல்

உன் வீட்டு
பால்கனியில்
துளிர்த்திருக்கிறது
என் பிரியம்

போய்ப் பார்

நீருற்று

வெறும் செடி
என நினைத்து
விட்டுவிடாதே
வெயிலில்

நிகழ்வுகள்

தாயிடம்
தொலைந்த குழந்தையை
ஒப்படைத்தேன்

சிரித்தபடியே
கையசைத்தது

திரும்ப நடந்தபோது
எதுவோ
தொலைந்தது போலிருந்தது

பிரிவு

பிரிவே
இருவருக்கும் நல்லது
இதை நீ
சந்திக்காமலேயே
சொல்லி இருக்கலாம்

குழந்தையின் மரம்

தாளில்
குழந்தை நட்டுப்போன
மரத்தை உலுக்கினேன்
பறந்தது பறவை
வண்ணம் தெளித்து

Sunday, February 13, 2011

நிலா

நீரில் விழுந்த நிலவை
எடுக்கப் பார்க்கிறது
ஆகாய நிலா

Saturday, February 12, 2011

மீதி வரிகள்

1-

தனியே அருந்தும் தேநீர்
நினைவில் வந்து
சுவையூட்டும் நண்பர்

2-

உறக்கம் போக்கும்
கனவை கைப்பற்றுங்கள்
உறக்கம் சேர்க்கும்
கனவை கைவிடுங்கள்

3-

கிடைத்த வரியில்
கிடைக்கலாம்
மீதி வரிகள்

4-

சாகும்வரை பாட்டி
மரணம் பற்றிய கதையை
சொன்னதே இல்லை

5-

பகலின் தனிமை
இரவில் விடுபடும்
கனவுகள் மூலம்

6-

உழைப்பே
உண்மையான மொழி
மற்றதெல்லாம்
தேவையற்ற எழுத்துக்கள்

கழிகிறது காலம்

எப்படி சொல்வதென்று
தெரியவில்லை
எப்படி சொல்லாமலிருப்பது
என்றும் புரியவில்லை
இரண்டுக்கும் இடையில்
கழிகிறது காலம்
துன்புறுத்தி

Friday, February 11, 2011

மிதந்த முத்தங்கள்

முத்தம் தந்து
கையை
எச்சிலாக்கிப்போனது குழந்தை
மிதந்த முத்தங்களை
எண்ணிக்கொண்டிருக்க
மீண்டும் வந்து
கூட்டியது கணக்கை

எளிய கவிதை

இந்த எளிய கவிதையை
நீங்கள் இமை
மூடித்திறப்பதற்குள்
படித்துவிடலாம்
பின் பொறுமையாய்
உணரவேண்டும்
உள் சேர்ந்திருப்பதை

Wednesday, February 9, 2011

புள்ளியில்

புள்ளியில்
தொங்கும் கவிதை
மகாகனம்

அதைப்
புள்ளித் தாங்குவது
எங்கணம்

இருள்

இருளில்
இருள் செய்த
சதுரங்கக் காய்களை
வைத்து விளையாடுகிறது
இருள்

நேரங்கள்

குழந்தை
இறைத்துவிட்டுப்போன
நேரங்களை
அள்ளி அள்ளி
ஒத்தடம் கொடுக்கிறேன்
வயதின்மேல்
கனக்கும் வலிகளுக்கு

போல

எதுவும் சொல்லாமல்
வெளியேறுகிறாய்
எல்லாம் சொல்லிவிட்டதைப் போல

எதுவும் பேசாமல்
உள்ளிருக்கிறேன்
எல்லாம் கேட்டுக்கொண்டதைப்போல

Monday, February 7, 2011

ஒரு உரையாடல்

நான் யுத்தங்களால்
ஜெயிப்பவன்

நான் வியூகங்களால்
ஜெயிப்பவன்

கால்கள்

நீ வழிப்போக்கனின்
கால்களாக இருக்கப் போகிறாயா

பந்தய வீரனின்
கால்களாக இருக்கப்போகிறாயா

கால்களிடம் கேட்டேன்

சொன்னது
கால்களாக இருக்கப் போகிறேன்

Saturday, January 29, 2011

தங்கையின் நினைவுக்கு

தங்கையின் கண்ணோரம்
கசிந்த துளியை
அண்ணன்தான்
கவனித்துப் பார்த்தார்

பின்னாளில் சொன்னார்

அந்த கண்ணீர்
தங்கையின்
வலியை
வருத்தத்தை
வாழ்க்கையை
குழந்தைகளை
எல்லாம் சொன்னதாக

தங்கைக்கு நிகழப்போகும்
மரணம் பற்றி
சொன்னதை
கடைசி வரை
சொல்லவே இல்லை

(எங்களை விட்டு மறைந்துபோன
தங்கை அமுதாவின் நினைவிற்கு)

நிகழ்வு

உன் நட்பில்
இளைப்பாறவே வந்தேன்
காதலில் பசியாறிச்
செல்கிறேன்

ஜுவாலை

உன் ஜுவாலை
எழுத்தையும்
எரிக்கிறது

எப்படி எழுத
சொல்

Wednesday, January 26, 2011

மூன்று கவிதைகள்

அம்மா கூப்பிட
ஓடியது குழந்தை
சொர்க்கத்தை நிரப்பிவிட்டு

----------

வியூகம்
அமைத்த பின்பே வேட்டை
சில நேரம்
சிக்கிவிடுகின்றன
வியூகத்திலேயே

-----------

உனக்கென்ன
இறைத்துவிட்டுப் போகிறாய்
அடுக்கிவைப்பதற்குள்
போய்விடுகிறது
என் பொழுது

-----------

Monday, January 24, 2011

நமக்குள்

நீ தொட்ட
அந்த இடம்
இதமாக இருக்கிறது என்றேன்

தொடவே இல்லை என்றாய்

நீ தொடப்போகும்
அந்த இடம்
இதமாக இருக்கும்
என்பதைதான்
அப்படிச் சொன்னேன் என்றேன்

விளையாட்டாக அடிக்கிறாய்

பின் தொடுகிறாய்
காதலையும்

எல்லைகள்

எப்போது கூப்பிட்டாலும்
தொடர்பு எல்லைக்கு
வெளியிலேயே இருக்கிறாய்

எல்லைகளற்றது காதல்
என நீ சொன்ன
வரிக்குள் நுழைந்து
தேடுகிறேன் உன்னை

வார்த்தை

அந்த வார்த்தை வேண்டுமா
என்று திரும்ப திரும்ப
யோசித்து
முடிவுக்கு வந்தேன்
கவிதையே
வேண்டாமென்று

Sunday, January 16, 2011

குழந்தைச் சித்திரங்கள்

ஒற்றைக் கொலுசு
தொலைத்துப் போனவளை
இசையாக வரைகிறது

----

இங்கிருக்கும் நீ
அங்கிருந்து
எப்படி வருவாய்

------

காலியான வீடு
வெள்ளையடிப்பவன் கண்களில்
குழந்தைச் சித்திரங்கள்

----

அரங்கத்தின் அமைதியை
வலிமையாக்குகிறது
குழந்தையின் சத்தம்

------

லாஸ் ஏஞ்ஜெல்ஸ்சில்
எங்களூர் கிராமம்
டெஸ்க்டாப்பில்

பொறுத்திருந்து

ஜன்னல்
திறக்கும் போதெல்லாம்
வந்து போகிறது
பட்டாம் பூச்சி

இப்போதெல்லாம்
மூடுவதே இல்லை
ஜன்னலை

ஒரு நாள்
விருந்தினராக
உள்ளே வரலாம்

பொறுத்திருந்து
பார்க்க வேண்டும்

Wednesday, January 12, 2011

அனுப்பி வை

நீ பார்க்க வரவேண்டும்
என்றில்லை
உன் நினைவை
கொஞ்சம் அனுப்பி வை
போதும்

Monday, January 10, 2011

ஏழு

குளிரில்
படபடக்கும் பட்டாம் பூச்சி
எதைப் போர்த்திக்கொள்ளும்

-----

எப்போது தேடினாலும்
எழுதாதப் பேனாவே
கையில் கிடைக்கிறது

------

அம்மா காட்டிய உலகத்தைதான்
படித்துக்கொண்டிருக்கிறோம்
இன்னும்

-----

சித்தப்பாவின் கடிகாரத்தைக்
கட்டிக்கொண்ட குழந்தை
மணி பார்த்துச் சொல்கிறது
உலகத்திற்கு

---

சுவர்கள் பேசுவதைக்
கேட்கும்போதெல்லாம் கூடுகிறது
அமைதியின் கனம்

---

நகரத்தை விட்டு வெளியேறியவன்
சுற்றிக்கொண்டிருந்தான்
நகரத்திலேயே

----

நீ புள்ளியான தொலைவை
கடப்பது ஒன்றும் கடினமில்லை
அதுவும்
புள்ளிப்போலத்தான்

விளிம்பில்

போதும் என்ற வார்த்தையை
பழகி வைத்திருப்பவர்கள்
தயாராகிவிடுகிறார்கள்
திருப்தியின் விளிம்பில் நின்று
போதும் என்று சொல்வதற்கு

வெளியேற்றம்

இந்தக் கவிதையிலிருந்து
நீ வெளியேறினால் என்ன
இந்த தாளில்
நீ இருந்துகொண்டே இருப்பதை
என்னால் உணர முடிகிறது

சொல்லிச் சென்ற வரி

உன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை
என்று நீ சொல்லிச் சென்ற வரி
சொல்லிக்கொண்டிருக்கிறது
எவ்வளவோ எனக்கு

Monday, January 3, 2011

நீ தந்த வரிகள்

படித்து
கைதட்டி சிரித்து
ரசிக்கிறாய்
உனக்குத் தெரியாது
அது உன் கண்கள் தந்த
வரிகள்தான் என்று

முகவரி

துண்டு காகிதத்தில்
நீ எழுதித் தந்த
முகவரியைத்
தொலைத்துவிட்டேன்
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்னையும்