Sunday, September 27, 2009

திசை

பிரய்லி எழுத்துக்களில்
ஊர்ந்து போகிறது எரும்பு
தன் திசையைப் பார்த்தபடி

எல்லோரும் எழுதும் கவிதை

எல்லாவற்றையும்
உன் மெளனத்தில்
மொழிபெயர்கிறாய்

உன் மெளனத்தை எதில்
மொழிபெயர்ப்பாய்

மற்றொருவன்

நாளை வரை காத்திரு
என்றான் ஒருவன்

இன்றிலேயே
என் நாளையைப் பார்க்கிறேன்
சொன்னான் மற்றொருவன்

Tuesday, September 22, 2009

பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு பென்சில் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு சாக்லெட் கிடக்கிறது
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு முகவரி
ஒரு வானவில்
ஒரு மலர்
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
ஒரு பாதை
ஒரு கவிதை
ஒரு வானம்
ஒரு உயிர்
எதையும்
பார்க்காமல் போகிறீர்கள்

உங்கள் காலடியில்
நீங்கள் கிடக்கிறீர்கள்
பார்க்காமல் போகிறீர்கள்

Sunday, September 20, 2009

கனவிலும்...

ஓடிக்கொண்டிருப்பவன்
ஓடிக்கொண்டிருக்கிறான்
கனவிலும்

சதுரங்க வார்த்தைகள்

இந்த முறையும்
நம் உரையாடல் முடியும் தருவாயில்
உன் ஒரு புதிர்

என்னால் அவிழ்க்க முடியவில்லை

நீ ஆழமாகப் பார்க்கிறாய்

கேட்க வேண்டாம் என்று கிளம்புகிறேன்

தூறல் என் பதட்டத்தைக் குறைக்கிறது

உன் புதிரை ஆராய விரும்பவில்லை

புதிருக்குள் ஓடிப்போய்
எதையும் கண்டெடுக்கத் தீவிரப்படவில்லை

சிலவற்றைத் தெரிந்து கொள்ளாமல்
இருப்பதே நல்லது

உன் சதுரங்க வார்த்தைகளில்
நாளையும் விளையாடுவாய்

வேறு புதிர்களோடு முடிப்பாய்

நம் நட்பு இன்னும் சாத்தியப்படலாம்

நீயே புதிராக ஆகாதவரை

இமைக்கும் நேரத்தில்

கண் இமைக்கும் நேரத்தில்
உன்னைப் பற்றி
எழுத வைக்கிறாய்
கண் இமைக்காமல் அதை
நீண்ட நேரம்
படிக்க வைக்கிறாய்

Saturday, September 19, 2009

உனக்குத் தெரியாமல்

வரத்துடித்த
நொடி உணர்ந்து
சமாளித்து
உன்முன்
புன்னகை செய்து
எதையோ எடுப்பதுபோல்
சற்றுத் தள்ளிப்போய்
துடைக்கிறேன் கண்ணீரை
உனக்குத் தெரியாமல்

துடைத்த கண்ணீரிலிருந்து
பார்க்கின்றன
உன் விழிகள்
என்ன சொல்வதென்று
தெரியாமல்

குழந்தைகள்

கை நீட்டிச் சேமிக்கிறது
குழந்தையின் கையில்
குழந்தை மழை
---
பூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை
அம்மா பார்த்துத் திட்டுகிறாள்
பூப்போல் சிரிக்கிறது குழந்தை
---
அம்மாவின் புடவைக்குள்
ஒளிந்து கொண்ட குழந்தை
பேசிப்பார்க்கிறது
அம்மாவைப்போல
---

Tuesday, September 15, 2009

இருளின் சுகம்

மொத்தமாய் இருள்

பிரித்து பிரித்து வைத்து
கடக்க ஆரம்பித்தேன்

இடையிடையே
வந்து போனது வெளிச்சம்

இருளின் சுகத்தை
உணர்ந்து நடந்தன கால்கள்

ஒத்திகைக் குறத்தி

அரங்கேற்றம்
செய்யச் சொல்லி
அவசரப்படுத்தி
மேடையை நோக்கித்
தள்ளி விடுகிறாள்
ஒத்திகைக் குறத்தி

Saturday, September 12, 2009

பயணத்தில்

விடைபெற்று கிளம்பினேன்
அம்மாவின் கண்ணீர்
வழிந்துகொண்டிருந்தது
பயணத்தில்

Friday, September 11, 2009

இந்த தருணங்கள்

நீ இறங்கி விடுவாயோ
என்ற பதட்டதிலேயே
நீ இருக்கும் இந்த தருணங்களை
இழந்து கொண்டிருக்கிறேன்

Wednesday, September 9, 2009

கண்ணாடி வண்ணத்துப்பூச்சி

கண்ணாடி வண்ணத்துப்பூச்சி
பறக்கிறது கம்யூட்டரிலிருந்து
ஈமெயில்களைக் கொறித்தபடி

Tuesday, September 8, 2009

குழந்தையின் பொம்மை

மறந்து வந்த குழந்தை
அம்மாவிடம் கவலைப்படுகிறது
வீட்டில் தனியாக
விட்டு வந்த பொம்மைப் பற்றி

பனித்துளி

இறந்து கொண்டிருக்கும் பனித்துளி
செத்துப் போக மாட்டேன் என்கிறது
கவிதையில்

Friday, September 4, 2009

தாலாட்டு

மழையில் நனைந்து வந்த குழந்தை
தூங்கியது
மழையின் தாலாட்டில்