Thursday, November 22, 2012

பூ

உன் புன்னகையிலிருந்து 
விழுகிறது பூ 
கவிதைச் சூடிக்கொள்ள

Monday, November 12, 2012

காலம்

காலம் நம்மை 
எப்படிப்பட்ட கதாபாத்திரங்களாக 
மாற்றி இருக்கிறது 
பார்த்தாயா 
நீ கல்லெறிகிறாய் 
நான் காயம் வாங்குகிறேன்

Saturday, November 3, 2012

முடியும்

இது பயணச் சீட்டின் 
பின் புறம் உன்னை 
எழுதிய வரிகள்தான் 
ஆனாலும் பயணம் 
முடியும் வரை
படிக்க முடியும்

வரிகளில்

மரணத்திலாவது சந்திப்பாயா 
என்று நீ எழுதிய வரிகளில் 
இறந்து போனேன். 
எப்படி சந்திக்க?

Monday, October 15, 2012

சந்தித்தோம்

நீண்ட 
நாட்களுக்குப் பிறகு 
சந்தித்தோம் 

நீ கண்ணீரோடு 
வந்திருந்தாய் 

நான் கனவுகளோடு 
வந்திருந்தேன்

Thursday, October 4, 2012

ஆடுதல்

நினைவுகளின் மேல் 
குதித்தாடுகிறாய் 
இறக்கி வைத்தால் 
நினைவுகளாக 
குதித்தாடுகிறாய்

அலை


கால் நனைக்கும் அலை 
உன் ஞாபகத்தைக் 
கொண்டு வரும்
கண் தவழும் அலை 
உன் ஞாபகத்தில் 
மூழ்கி எழும்

நனைதல்

நீயும் 
நனைந்து வந்தாய் 

நானும் 
நனைந்து வந்தேன் 

மழையும் 
நனைந்து வந்தது

Tuesday, September 11, 2012

உரையாடல்


உரையாடலைத் துவக்கி வைக்க 
சக்கரை இல்லாதக் காப்பியைத் தருகிறாய்

உரையாடலை முடித்துக் கொள்ள 
அமைதியாகக் குடிக்கிறேன்

கிளம்பும் போது கேட்கிறாய்

காப்பியில் சக்கரை எல்லாம் 
சரியாக இருந்ததா என்று

நான் காப்பி நன்றாக இருந்தது 
என்கிறேன்

இந்த வரியின் சுவையில் 
நீ மெளனமாகிறாய் 

நான் வெளியேறுகிறேன்


Monday, August 27, 2012

உன்னை

விரிந்து கிடக்கும் 
வெள்ளைத்தாளில் 
எங்கே இருக்கிறாய் 
என் எழுத்து 
தேடத் தொடங்குகிறது 
உன்னை

Saturday, August 18, 2012

நீர் வானவில்


உள்ளங்கையில்
உன் பெயர்
மழையில் அழிய
நீர் வானவில்

Friday, August 17, 2012

அலை

தெரியாத அலை 
கால் நனைத்தது
உன்னைத் தெரியும் என்றது
பின் போனது

Tuesday, August 14, 2012

நனைந்தது மழை

நனைந்து போகாமல் 
என்னை அழைத்துப் 
போவாயா மழையே 

நனைந்தது மழை 
மழலையின் 
சொல் கேட்டு.

Sunday, August 5, 2012

அப்பா சட்டை

அப்பா சட்டையைப்
போட்டு வந்து 
காட்டுகிறது குழந்தை
தன்னை இளமையாகப் 
பார்க்கிறார் அப்பா 

Tuesday, July 24, 2012

சுமத்தல்

நீ மறந்து போன கனவை 
நான் இறந்து போக விடாமல் 
சுமந்து செல்கிறேன்

Sunday, July 1, 2012

போதும்


இந்தக் குளிருக்கு 
உன் சிறு அணைப்பு 
போதும்
நீ போர்வைகளைத் 
தருகிறாய்

அசையும் நதி


நீ தந்து போன முத்தத்தை 
விரலால் வழித்தெடுத்துப் 
பார்த்தேன் 
மின்னித் தெரிந்தது 
அசையும் நதியென

Friday, June 22, 2012

மேலும் சில குறிப்புகள்


உன் மெளனத்தால் 
என் கனவுகளை 
நீவி விடுகிறாய்

உரசலில் விழுகின்றன 
ஒன்றிரண்டு சொற்கள் 

அவை 
பின்னொரு நாள் 
வேறொரு கனவில் 
சொல்லலாம்
உன் நுட்பம் பற்றிய 
மேலும் சில 
குறிப்புகளை

Thursday, June 21, 2012

நீ ஆடிப் போன ஊஞ்சல்

1-

புன்னகைக்கிறாய்
கண்டறியப்படாத
என்னுள் இருக்கும்
தீவு ஒன்று
ஒளிர்கிறது
2-


நீ ஆடிப் போன ஊஞ்சல் 
அசைகிறது 
இதயத்திலிருந்து 
கவிதைக்கு

3-



சந்தித்து விட்டோம்
பிரியப் போகும்
தருணம்தான்
அச்சமூட்டுவதாகவே 
இருக்கிறது

Thursday, June 14, 2012

உணர்கிறேன்


சொற்கள் கருக 
நிசப்தம் பற்றி எரிகிறது 
என்று குறுஞ்செய்தி 
அனுப்பி இருக்கிறாய் 
வெப்பம் உணர்கிறேன்
வெளி வர முடியாமல் 

Monday, June 11, 2012

பொய்கள்

கூவி விற்றோம் 
அவரவர் பொய்களை 
விற்காமல் போன பொய்கள் 
பொய்யுடம்பில் கனக்க
திரும்பினோம்

Saturday, June 9, 2012

வழியின் நீரோடையில்

என் நினைவுகளில் 
உன் கனவுகளை 
இறக்கி வைக்கிறாய் 
மொத்த சுமைகளோடு 
வழியின் நீரோடையில் 
நீர் அருந்துகிறேன் 
என் களைப்பை 
இறக்கப் பார்க்கிறது 
நீரில் அசையும் நிலா

Saturday, June 2, 2012

சுவை

தேநீர் குடித்தபடியே
எழுதிக் கொண்டிருந்தேன்
எழுத்தில் சேர்ந்திருந்தது
தேநீரின் சுவையும்

Sunday, May 20, 2012

நீ

நீ கனவுகளுடன் 
உறங்கிக்கொண்டிருக்கிறாய் 
நான் சொற்களுடன் 
விழித்திருக்கிறேன்

Tuesday, May 15, 2012

எழுத எழுத

1-
எழுத எழுத
விரிகிறாய்
வானம் போல
2-
உன்னை எழுத்தில்
வரைந்து விடுவதால்
படிக்கவும் முடிகிறது
பார்க்கவும் முடிகிறது
3-
உன் கண்கள்
காதல் வங்கி
அதில் என்
கனவுகளைப்
போட்டு வைத்திருக்கிறேன்

Monday, March 26, 2012

குழந்தை

எனக்கும்
 எழுதத் தெரியும்
 என்கிறது குழந்தை
 கிறுக்கியபடி

Monday, March 12, 2012

கடல் வரையும் குழந்தை

மீன் தொட்டியும்
மீன்களும்
வரையச் சொல்கிறார் அப்பா

கடல் வரைகிறாள் குழந்தை

காரணம் கேட்கிறார் அப்பா

வண்ணமாய் சிரித்து
விளக்குகிறாள் குழந்தை

இதுல
பல்லாயிரக்கணக்கான மீன்களும்
ஆயிரக்கணக்கான மீன் தொட்டிகளும்
இருக்குப்பா

ஜன்னல் சாரல்

நனையாதே வா என்று
அம்மா இழுத்து வந்து விட
ஜன்னல் சாரலை
மழையாக்கும் குழந்தை

அம்மாவின் முத்தத்தில்

அம்மாவின் முத்தத்தில்
காலத்தின் ஈரமும்
கலந்திருக்கிறது
அதனால்தான்
இது இன்னும்
காயாமல் இருக்கிறது

Thursday, March 8, 2012

அதிக ஆயுளுடன்

குளிர்சாதனப் பெட்டிக்குள்
வைக்கப்பட்டிருக்கும்
பழங்களைப் போல
உன் குறுஞ்செய்திகள்
என் அலைபேசிக்குள்
அதே சுவையுடன்
அதிக ஆயுளுடன்

பல

கொறித்த வரிகள்
எல்லாம்
செறிக்கவில்லை
கனவைக் கலைக்கும்
பல

Tuesday, March 6, 2012

நினைவை அடுக்குதல்

நினைவின் மேல்
நினைவை அடுக்கி
படியாக்கி
மேலேறிப் போய்
உன் பெயர் வைத்த
நட்சத்திரத்திற்கு
ஒரு முத்தம்
பதித்துவிட்டுத்
திரும்பினேன்

Sunday, February 26, 2012

குழந்தை

குழந்தை அழகாக
அடுக்கி வைக்கிறது
அதை விட அழகாகவும்
கலைத்து விடுகிறது

Tuesday, February 21, 2012

தொலைதூரம்

உன் முகம்
என் கவிதையின்
ஒரு வரியை
ஞாபகத்திற்கு கொண்டு வந்தது
கவிதையைத் தேடி
நான் போக
நீ போயிருந்தாய்
தொலைதூரம்
என் திசைகளுக்கு
எட்டாமல்

Tuesday, February 14, 2012

போன மழை

என்னிடம்
பத்திரமாய் இருக்கிறது
போன மழை
விட்டுச் சென்ற
காதல் கதை

Saturday, February 11, 2012

சின்ன கவிதை

சின்ன கவிதையை
எழுதாத போது
மிகச் சின்ன கவிதையாகிப்
போனது

Friday, February 3, 2012

மெளனத்தில் செய்த அகராதி

1-

உன் மெளனத்தில்
நான் செய்த
அகராதியில்
மொழி முகம் பார்க்கிறது

2-

உன் குரலை
சேமித்து வைத்திருந்த
ஒலி நாடாவைத்
தொலைத்து விட்டேன்
நல்லவேளை
நினைவு நாடாவில்
ஓடிக்கொண்டிருக்கிறாய்
நீங்காத இசையாய்

Thursday, January 26, 2012

வெற்றிடம்

தன் மழலையால்
என் வெற்றிடத்தை
வண்ணமாக்கிவிட்டுப்
போகிறது
ஒரு குழந்தை

அணில்

எப்போதும்
என்னிடம் வந்து
தானியம் வாங்கிப்போகும்
அணில்
இன்று சொல்லிவிட்டுப்
போனது
என் பெயரை

Wednesday, January 25, 2012

வானம்

நீ விட்டுப்போன
கைக்குட்டை
விரித்து வைக்க
வானமாச்சு

Saturday, January 21, 2012

மழைத்துளி

என் கனவில்
வந்த நீ
அழுதுகொண்டிருந்தாய்
பதறிப்போய்
துடைத்தபோது
என் கையில்
ஒட்டி இருந்தது
மழைத்துளி

Sunday, January 15, 2012

அன்பாக

நீ அன்பாக
கண்டிப்பதும்
அன்பாகவே இருக்கிறது

காலிப்பானை

காலிப்பானை
கண் விழித்துப் பார்க்க
மனசெல்லாம் பொங்கல்

Saturday, January 14, 2012

சுவடுகள்

கவிதையில்
உன் புன்னகையின்
சுவடுகள்
நீ வந்துவிட்டுப்
போயிருக்கிறாய்

Friday, January 13, 2012

முதியவர்கள்

1-

பால்கனியில்
காலம் கொறித்தபடி
முதியவர்

2-

யாரும் கவனிக்கவில்லை
அலை வந்து
கவனித்துப் போகிறது
முதியவரின் அழுகையை

Wednesday, January 11, 2012

அவனுக்கு

பட்டினியில் இறந்து போனவனை
புகைப்படம் எடுக்கிறீர்கள்

உங்கள் கோணத்தில்
புதுபுது பட்டினிகள்
விதவித மரணங்கள்

புறப்படுகிறீர்கள்

உங்களுக்கு
நிறைய கிடைத்தது

பத்திரிக்கைக்கு
நிறையவே கிடைத்தது

அவனுக்குதான்
எதுவுமே கிடைக்கவில்லை

Saturday, January 7, 2012

இசைக்குறிப்புகள்

1-

கனவில்
விழித்திருக்கத்தானே
போகிறோம்
எதற்கு
குறுஞ்செய்தியில்
குட்நைட் சொல்கிறாய்

2-

இந்த காதலை
வாழ்நாளெல்லாம்
கடந்துகொண்டே
இருக்க வேண்டும்

3-

நீ பேசும்போது
உன் உதடுகள்
இசைக்குறிப்புகளைப் போல
அசைகின்றன

Friday, January 6, 2012

போதும்

தொலைந்த குழந்தையைப் போல
சுற்றிக்கொண்டிருக்கிறேன்
என்னை ஒரு
சைத்தான் கண்டெடுத்தாலும்
பரவாயில்லை
ஒரு தாயிடம்
ஒப்படைத்துவிட்டால்
போதும்

எப்படியும்

எப்படியும் விடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
விழித்திருக்கிறேன்

Wednesday, January 4, 2012

போய்விடு

என்னால் வந்து உன்னை
வழி அனுப்பி வைக்கமுடியாது

கையசைப்பு
கண்ணீர்
பிரிவு
வலி
என்னால் தாங்க முடியாது

என்னிடம் சொல்லாமல்
எனக்குத் தெரியாமல்
கிளம்பிப் போய்விடு

Tuesday, January 3, 2012

இந்த தடத்தில்

உனது வரியும்
எனது வாக்கியமும்
தண்டவாளங்களாயின
நமது உரையாடல்
பயணிக்கத் தொடங்கியது
இந்த தடத்தில்

Monday, January 2, 2012

உன் கண்களில்

1-

மழை பிழிந்து
செய்த இசை
உன் குரல்

2-

உன் கண்களில்
பதில்
இருக்கிறது

Sunday, January 1, 2012

பசி

நமக்கு
வேறு வேறு
பசிகள்
அவர்களுக்கு
வயிற்றுப் பசி
மட்டும்தான்

ஒன்றுதான்

அங்கிருக்கும் நீயும்
இங்கிருக்கும் நீயும்
வேறுவேறல்ல
ஒன்றுதான்

சில வரிகளில்

சில வரிகளில்
நீ சொல்லிவிட்டுப்
போய்விடுகிறாய்
நான்தான் மொழியிடம்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்

இதுவே

இதுவே
கடைசி சந்திப்பாக இருக்கலாம்

பூங்கொத்துக்களை
தந்து செல்ல விருப்பமில்லை

உன் தோட்டத்தில்
விதைகளை நட்டுச் செல்கிறேன்