Tuesday, December 28, 2010

கடிதம்

முதியவருக்கு வந்த கடிதத்தை
படித்துக் காட்டினேன்
என் தந்தைக்கு
எழுதுவது போன்று

Sunday, December 12, 2010

சொல்லியபடி

நினைவுக்கடியில்
ஓடும் நதி
உன் பெயர்
சொல்லியபடி

Thursday, November 18, 2010

பசி

பகிர்ந்து சாப்பிட்டோம்
கிடைத்ததை
வாங்கிக் கொண்டது
நாகரீகமான பசி

குழந்தையும் நிலவும்

1-
சின்ன கண்ணாடிக்குள்
கொஞ்சம் கொஞ்சமாய்
முகம் பார்க்கிறது குழந்தை

குழந்தையின்
மொத்த முகத்தையும்
தனக்குள்
கொண்டுவரப் பார்க்கிறது
கண்ணாடி

2-

தன்னைக் காட்டி
குழந்தைக்கு
சோறு ஊட்டியதைப்
பார்த்துக்கொண்டிருந்தது நிலவு
பின் தன்
ஒளி நாக்கை நீட்டி
அதுவும் கொஞ்சம்
அம்மாவிடம்
வாங்கிக்கொண்டது

Sunday, November 7, 2010

யாருமில்லை

யாருமில்லாத வீதியில்
நீ நடக்கிறாய்
எனை நினைத்து

நீ இல்லாத கவிதையை
நான் கடக்கிறேன்
உன் நினைவை
துணைக்கழைத்து

தெரிதல்

நினைவில் உன்னை
வரைந்து பார்த்தேன்
கோடுகளற்ற
உருவமாய்த் தெரிந்தாய்

நன்றி

நீ அணைத்தபோது
துளி கண்ணீர் வந்து
நன்றி சொன்னது உனக்கு

Thursday, October 28, 2010

வீடெங்கும்...

வீடெங்கும்
விளையாடுகின்றன நிறங்கள்
குழந்தை வரைந்த வானவில்

நடனம்

உன் கண்கள்
வரைந்து போன
மெல்லிய கோடு
மின்னுகிறது காற்றில்
வளைந்து நெளிந்து
நடனமிட்டபடி

Monday, October 25, 2010

புல்லாங்குழல் கண்கள்

1-

கிடார் இசைக்கும் மழை
கேட்கலாம்
பார்க்கலாம்
புல்லாங்குழல் கண்களால்

2-

பயணம்
ரயில்
புத்தகமானது

3-

இளைப்பாறும் நிழலை
வெட்டுகிறான்
வெயில் தீண்ட

Tuesday, October 19, 2010

உனது பதிவுகள்

1-

நீ பிறந்த நாளின்று
நான் ரத்தம் கொடுத்தபடியே
உனக்கான கவிதையை
யோசித்துக்கொண்டிருக்கிறேன்

2-

நம் அருகில் அமர்ந்திருந்த
பார்வையற்ற தோழர்
சொல்லிச் செல்கிறார்

என்னால் உங்கள் காதலைப்
பார்க்க முடிகிறது

3-

இனிப்பை விட்டுவிட்டு
உன் பெயரை
இழுத்துப் போகின்றன
எறும்புகள்

Sunday, October 17, 2010

உனக்கானவை

1-

உன் சிரிப்பின்
கைப்பிடித்துப் போகின்றன
நினைவுகள்
இங்கேயே நிற்கிறேன்
அது வந்து
சொல்லப் போகும்
கவிதைக்காக

2-

அந்நியமாக
நீ கடந்து போகிறாய்

வழி நட்பாக
நான் மிதந்து போகிறேன்

Saturday, October 16, 2010

உன்னை நோக்கி...

இனிப்புகளும் தித்திப்புகளும்
என்னை
திசைத் திருப்பலாம்

உன் கசப்பின்மையே
உன்னை நோக்கி
என்னை வரச் செய்யும்

Thursday, October 14, 2010

குறுஞ்செய்திகள்

நீயில்லை
உன் குறுஞ்செய்திகள்
விழுந்து குதிக்கிறது
என்மேல்

Monday, October 11, 2010

நிகழ்தல்

நான் பேசுவது
பிடிக்கும்போது
புன்னகைக்கிறாய்
இல்லாதபோது
மெளனமாகிறாய்
புன்னகைக்கும் மெளனத்திற்கும்
இடையில் நிகழ்கிறது
உன் உரையாடல்

Monday, October 4, 2010

விரிதல்

புள்ளியாய்
வரைந்த பறவை
விரிகிறது
தாளை ஆகாயமாக்கி

ஒரு மதியத்தில்

ஒரு ஞாயிறு மதியத்தில்
நீயும் நானும்
பேசிக்கொண்டிருந்தோம்
பின் பேசியதைக்
கேட்டுக் கொண்டிருந்தோம்

Sunday, September 26, 2010

சுவரில்

1-
விரட்டினாலும்
கவ்வப் பார்க்கிறது
நள்ளிரவு தனிமை

2-

வீடு மாறப் போகிறார்கள்
சிறுமியின் நன்றி கடிதம்
சுவரில்

Saturday, September 11, 2010

கவிதைகளில்...

சொல்லாமல்
அனாதையான காதல்
தன் சொந்தத்தைத்
தேடுகிறது
கவிதைகளில்

Thursday, September 9, 2010

இரண்டு கவிதைகள்

1-

பழுது நீக்கப்பட்ட கவிதை
ஓடிக்கொண்டிருக்கிறது
கடிகாரத்தைப்போல

2-

மூவரும் தப்பாய்
அடையாளம் காட்டினார்கள்
கை நிறைந்த விலாசம்
அழைத்துப்போனது அவனை
தெருக்களின் குறிப்புகளை
சொல்லியபடி

Wednesday, September 8, 2010

நட்பின் நிறங்கள்

உன் நட்பை
நானொரு
வானவில் என்றேன்

அதை நீ
காதலாக வரைந்து
பார்க்கச் சொல்கிறாய்

அது நட்பின் நிறங்களாகவே
இருக்கட்டும்
என்கிறேன் நான்

மெகா சீரியலும் பார்வதி அக்காவும்

பார்வதி அக்கா
மெகா சீரியல்கள் விழுங்கிய
தனது நேரங்களை
கவலையுடன் யோசித்தபோது
அந்த நினைவுகள்
இன்னொரு மெகா சீரியலாகி
மறுபடியும் அவளை
விழுங்கத் தொடங்கின

Tuesday, August 31, 2010

கடைசிவரை

பிரயாணத்தில்
கடைசிவரை தூங்கவே இல்லை
சிறுமியும் ரயிலும்

மந்திரவாதியும் குழந்தையும்

மந்திரவாதி குழந்தையிடம் சொன்னார்

நான் நினைத்தால் உன்னை
என்ன வேணாலும்
ஆக்க முடியும்

சிரித்தது குழந்தை

மறுபடியும் சொன்னார்

சத்தமாய் சிரித்தது

மந்திரவாதி கோபப்பட
குழந்தை சொன்னது

என் சிரிப்பை
அழுகையாக மாற்று

வேகமான மந்திரவாதி
என்னவெல்லாமோ பயமுறுத்தி
குழந்தையை
அழவைக்கப் பார்த்தார்

குழந்தையின் சிரிப்பில்
கூடிக்கொண்டே போனது
பிஞ்சு இசை

கடைசியில்
எல்லாம் மறந்து
குழந்தையுடன் சேர்ந்து
சிரித்தபோது
குழந்தையானார் மந்திரவாதியும்

Monday, August 30, 2010

மழைச் சிறுமி

பள்ளிக்கூட மணி அடிக்க
மழை பெய்தது
எல்லோரும் ஓடினர்
ஒரு சிறுமி
மெதுவாக
மிக மெதுவாக
எடுத்துக் கொண்டிருந்தாள்
விழுந்த புத்தகங்களோடு
மழைத்துளிகளையும்

Sunday, August 29, 2010

ஒரு குறிப்பு

இறகைப் போல
பின் தொடர்கிறாய்
பறவையைப் போல
விடை பெறுகிறாய்

Wednesday, August 25, 2010

காத்திருப்பு

காத்திருக்கும் போது
நானொரு
சிலை செய்தேன்

சிலை
கண் திறந்து
கொட்டியது
காதலின் வெப்பத்தை

Monday, August 23, 2010

தண்டித்தல்

என்னை சிறையில்
தள்ளிய கனவை
தண்டிக்க வேண்டும்
வெளியே
கொண்டு போகப்போகும்
கனவிடம் சொல்லி

Thursday, August 19, 2010

சொல்லுதல்

ஆன்மாவில் ஏற்றிய கற்பூரம்
அணையவில்லை
சுடர்விட்டு எரிகிறது
உன் பெயரை
சொல்லியபடி

Tuesday, August 17, 2010

குருதி

எங்கள் குருதியை
நீங்கள் குடித்துக் கொண்டிருக்கிறீர்கள்
எங்கள் ஆயுதங்கள்
உங்களைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன

Sunday, August 8, 2010

மிகச் சிறிய கதை

இப்போது நான் உன்னை
கொல்லப் போகிறேன்
உன் கடைசி ஆசை
என்ன சொல்

சீக்கிரம்
கொன்றுவிடுங்கள்

Sunday, August 1, 2010

எதுவுமற்று

உரையாடினோம்

உன் வார்த்தையின்
வழிபிடித்து
எங்கோ போனேன்

எதுவுமற்ற அந்த வெளியில்
மிதந்தது இதமாக இருந்தது

எதுவுமற்று

சத்தமிட்டாய்

எல்லாம் அறுபட
உன் எதிரில்
அமர்ந்திருந்தேன்

எதுவுமற்று

அறுந்ததை தேடும்
பிள்ளையின் அழுகுரல்
என்னுள் கேட்டபடி

Friday, July 30, 2010

ரகசியம்

நீ என்னை அணைத்த போது
உன் காதில்
நானொரு ரகசியம் சொன்னேன்

சரியாக புரியவில்லை என்று
மேலும் அணைத்தாய்

மேலும் அணைத்தாய்

மேலும்

நான் ரகசியம் மறந்து போனேன்

Tuesday, July 27, 2010

நாம்

நாம் சேர்ந்து
தூக்கி எறிந்தோம்
காதலை

விழுந்து
உடைந்து போகட்டும் என்று

பிடித்துக் கொண்ட
பிரபஞ்சம் சொன்னது

நீங்கள் திரும்ப
கேட்கும்போது
தருகிறேன் என்று

Saturday, July 24, 2010

யாத்ரீகன்

உன் பெயரிலிருந்து
தூறும் அன்பில்
நனைந்து போகிறேன்
பெயரற்ற
யாத்ரீகனைப் போல

Monday, July 19, 2010

கண்டெடுத்தல்

ஏதோ ஒரு வார்த்தையில்
தொலைந்து போனேன்
கவிதை கண்டெடுக்குமா
தெரியவில்லை

தொலைந்தவன்

பல காலங்களுக்கு முன்னால்
நான் கொண்டு வந்த
கிராமத்தானைத் தேடுகிறேன்
நகரத்தில்
எங்கு ஒளிந்திருக்கிறானோ
தெரியவில்லை

Saturday, July 17, 2010

பார்த்தல்

பேப்பர் போடும்
சிறுவனின் கண்களால்
பார்க்க வேண்டும்
அதிகாலையை

பறத்தல்

பிரிக்காமலேயே
கிழித்து எறியப்படும்
கடிதத்திலிருந்து பறக்கின்றன
பிரியங்களின்
மின்மினிப் பூச்சிகள்

Sunday, July 11, 2010

நண்பனின் மரணம்

நண்பனுக்காக
காத்துக்கிடக்கிறேன்
நிரப்பப்பட்ட
மதுக்கோப்பைகளுடன்

வந்தவுடன்
வா நீர் ஞானம்
அடையலாம் என்று
தொடங்கி விடுவான்

போதையின் மேல்
அவன் ஏறிப்போகும் போது
செய்யும் ரகளைகள்
ரசிக்கும்படி இருக்கும்

செய்தி வருகிறது
அவன் விபத்தில்
இறந்து விட்டான் என்று

கிளம்புகிறேன்
அவன் மதுவையும்
சேர்த்து குடித்துவிட்டு

நெஞ்சுக்குள்
இறங்கிக் கொண்டிருக்கிறது
அவன் மரணம்
அமிலமாய்

Sunday, July 4, 2010

அங்கிருந்து

மகன் விட்ட காற்றாடிக்கு
அப்பாவின் பெயர் வைத்து
பார்த்துக் கொண்டிருந்தேன்
இங்கிருந்து

அப்பாவும்
பார்த்துக் கொண்டிருப்பார்
அங்கிருந்து

பாடல்

மனதுக்குள்
ஒலித்துக் கொண்டிருந்த பாடலை
எழுத முடிந்தது

ஒளிந்து கொண்டிருந்த பாடலை
எழுத முடியவில்லை

Tuesday, June 22, 2010

நீயும் நீயும்

1-

கால் கொலுசு சத்தம்
காதுகளில் வரைகிறது
ஒரு ஓவியத்தை

2-

வானவில் பார்த்தபடி
கண்கள் கீழிறங்க
நீ நடந்து போனாய்

முதல் வானவில்
எனக்கு மறந்து போனது

இரண்டாம் வானவில்லின்
வண்ணம்
வந்து ஒட்டிக் கொண்டது

Sunday, June 20, 2010

நான் எறிந்த கல்

1-

போட்டுப் போட்டுப் பார்க்கிறாள்
காலையில் போய்விடும்
அடகுக் கடைக்கு

2-

நள்ளிரவை கீறும்
அழுகுரல்
யாரென மனம் யோசிக்கும்
விடுயென தூக்கம் கத்தரிக்கும்

3-

காரின் பாடலை
பதட்டத்துடன் அணைக்கிறேன்
ஆம்புலன்ஸ் சத்தம்

4-

நிலா காட்டி
கதை சொல்லி
சோறூட்ட
குழந்தையில்லை
கண்கள் துடைத்து
சேர்த்துபோன கதைகளைச்
சொல்லிக் கொண்டிருக்கிறாள்
அந்த நிலவுக்கு

5-

யார் எறிந்த கல்லோ
என் மேல் விழுகிறது

நான் எறிந்த கல்லும்
என் மேல் விழுகிறது

Saturday, June 19, 2010

ஒரு குரல்

நள்ளிரவில்
குளிரில் விரைத்து
இறந்து போன பெரியவரை
செய்திக்காக
புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்

கூட்டத்திற்கு வெளியே
அப்பாவியாய்
ஒரு குரல் கேட்டது

அவரு குளிர்ல செத்துப் போயிட்டாரா
பசியில செத்துப் போயிட்டாரா

Friday, June 11, 2010

படிப்படியாய்

ஒவ்வொரு படியாக
குழந்தை இறங்க
கூடிக் கொண்டே
வந்தது வயது

கடைசி படியிறங்கியபோது
குழந்தை
மூதாட்டியாகி இருந்தது

நடைபாதையில்
குழந்தையும் மூதாட்டியும்
மாறி மாறி நடந்தனர்

பார்க்கத் தொடங்கினேன்
என்னையும் அதுபோல

படிப்படியாய்

Monday, June 7, 2010

கடலின் மெளனம்

1-

மொட்டை மாடி
கதை சொல்லும் தாய்
கேட்கும் நட்சத்திரங்களும்

2-

இரவின் தண்டவாளத்தில்
கனவின் ரயில் பெட்டி
புள்ளியாகி மறையும்

3-

உன் ஒரு
சொட்டு கண்ணீரில்
கடலின் மெளனம்

4-

நகர வேலை
கிராமத்தில் என்னை
நட்டு வைத்துவிட்டுப் புறப்படுகிறேன்

Monday, May 31, 2010

இசை படிந்த கோடு

1-

கடந்து வந்தபின்
திரும்பிப் பார்த்தேன்
நண்பனைப் போல்
தெரிந்தது பாலம்

2-

கூடவே வரும் வானவில்
வண்ணங்களின் கதைகளை
இறைத்தபடி

3-

சாப்பிடுவது போல்
பாவனை செய்கிறவன்
இன்னும் சோறு போட்டுக் கொள்கிறான்

4-

நள்ளிரவு குளிர்
தன் பிறந்தநாளை
நினைத்துக் கொள்ளும் காவலாளி

5-

நீர் அருந்தும் பறவை
தீர்க்கிறது
கவிதையின் தாகத்தை

6-

இசை படிந்த கோட்டின் கீழ்
இமை திறந்து பார்க்கும்
ஒலிகளும்

Thursday, May 27, 2010

அமைதியை வரைதல்

1-

ஓவியன் அறை
காலை ஒளி வரைகிறது
அமைதியை

2-

வீசும் வலையை
ரசிக்கும் மீன்கள்
பிடிபடப்போவது தெரியாமல்

3-

சிறுமி பாதம் பதிந்த மண்
வரவேண்டாம் என்கிறது
கடலை

4-

எல்லோரும் அவரவர்
நிலவைப் பார்க்கிறார்கள்
ஒரே நிலவில்

5-

தன் புல்லாங்குழலால்
மழையோடு சண்டையிட்டு
போகும் வழிப்போக்கன்

6-

இருளில் நிகழும் தாம்பத்யம்
சத்தமற்று
சத்தத்துடன்

Sunday, May 23, 2010

மூன்று கவிதைகள்

1-

நீரில் தடுமாறும் நிலா
குழம்புகிறான்
குடிகாரன்

2-

தானியம் காலருகில்
ஆகாயத்தை அலகால் கொத்தும்
கூண்டுக்கிளி

3-

என் அன்பை
நீ எடுத்துச் செல்வாயா
பத்திரமாய்

இல்லை
உன் அன்பு
என்னை அழைத்துச் செல்லும்
பத்திரமாய்

Thursday, May 20, 2010

பசியின் இசை

1-

இறந்த வண்ணத்துப்பூச்சி
தூக்கி எறிந்து
பறக்க வைக்கிறாள் குழந்தை

2-

ஊருக்குப் போனவர்கள்
பால்கனி செடி காய்கிறது
தண்ணீர் இல்லாமல்

3-

மூடுபனியை
திறக்கப் பார்க்கும் கவிதை
தோற்றபடி

4-

கை நீட்டி
பாடும் குழந்தை
பசியின் இசை

Monday, May 17, 2010

வழிகிறது

உனக்குத் தெரியாமல்
உன் புன்னகையிலிருந்த
பூவை எடுத்து
வெற்றுத் தாளில்
வைத்துப் பார்த்தேன்
நிரம்பி வழிகிறது கவிதை

Thursday, May 13, 2010

மிதந்தபடி

1-

நதியில்
மிதந்தபடி புல்லாங்குழல்
நீந்தியபடி இசை

2-

இல்லாத பாத்திரங்களையும்
நிரப்பிவிட்டுப் போகிறது
மழை

Tuesday, May 11, 2010

பனியின் பிள்ளைகள்

1-

ராணுவத்திலிருந்து
திரும்புகிறது வீர உடல்
அழும் கிராமம் பெருமையுடன்

2-

நிற்கவில்லை மழை
ரசித்தபடி அடுத்த கப்
தேநீர் குடிக்கும் மூதாட்டி

3-

மூடுபனிக்கிடையில்
நீயும் நானும்
பனியின் பிள்ளைகளைப் போல

4-

மதிய நேர பார்க்
காற்று தாலாட்ட
ஓய்வெடுக்கும் ஊஞ்சல்

5-

நனைந்து போகிறவள்
துவட்டிக் கொள்கிறாள்
தூறல்களில்

Saturday, May 8, 2010

முதல் நன்றி

மேகங்களில் நீந்தும் மழை
விழுகிறது
மீன்களாக
---

மெழுகுவர்த்தியின்
திரி நிழல்
கிறுக்குகிறது சுவரில்
---

புன்னகையுடன்
நன்றி சொல்லும்போது
முதல் நன்றியாகிறது
புன்னகை
---

சேர்ந்து போயிருக்க்கும் பசி
ஒற்றை வாழைப்பழத்தில்
தீர்த்துக்கொள்ள பார்க்கும் பைத்தியக்காரன்
---

Friday, May 7, 2010

வரைதல்

வரைந்ததைக் காட்டினாள் மகள்

அதை நீரில் நீந்தும் பறவை என்றேன்

சிரித்தபடியே மீண்டும்
வரையத் தொடங்கினாள்

எனது பறவையையும்
அவளது படகையும்

இசை

பனித்துளியில்
துளிர்விட்ட இசை
கேட்டுக் கொண்டிருந்தது
துளி மறைந்த பின்னும்

Tuesday, May 4, 2010

கூடும் பொய்கள்

கூட்டம் முடிந்து
மைக்கை கழற்றியவன் சொன்னான்

உனக்கும் எனக்கும்
பொய்யா கேட்டு
புளிச்சிப் போச்சில்ல

Sunday, May 2, 2010

வரைதல்

தூரிகையின் கனமோ
வண்ணங்களில் அடர்த்தியோ
காயப்படுத்திவிடக்கூடாது
கவனமாக வரைய வேண்டும் எறும்பை

Thursday, April 29, 2010

உன்னை...

உன்னை அழிப்பதும்
எழுதுவது போலவே
இருக்கிறது

Monday, April 26, 2010

தேநீர் தருணங்கள்

1-

உன் கைபக்குவம்
இந்த தேநீருக்கு இல்லை
ஆனாலும் இது உன்னை
ஞாபகப்படுத்த தவறவில்லை

2-

மழையில் ஒதுங்கி
குடிக்கும் போது
அமுதமாகி விடுகிறது தேநீர்

3-

டீ கிளாஸ் கழுவும் சிறுவன்
அருகில் இருக்கும்
பள்ளிக்கூடத்தைப் பார்த்தபடி

4-

யாருடனும் பேசாத பைத்தியக்காரன்
பேசுகிறான்
முடியும் வரை தேநீருடன்

5-

தேநீர் குடிக்கும் முதியவர்
அவர் பிஸ்கெட்டுக்காக
காத்திருக்கும் நாய்

6-

பேப்பருடன்
தேநீர் குடிப்பவர்களுக்கு உதவுகிறது
டீ ஆறிய பின்னும்
செய்திகளில் இருக்கும் சூடு

7-
நண்பர்களோடு தேநீர் உரையாடல்
அப்போது குடிக்கிறோம்
சுவையான நேரங்களையும்

8-

நீ தந்த தேநீர்
உன் அன்பின்
சுவை போலவே

9-

சிரமமாக இருக்கிறது
பிடித்தமான கடையை விட்டு
வேறு இடத்தில்
டீ குடிப்பது

Saturday, April 24, 2010

கனவில் பட்டாம்பூச்சி

கனவில் பட்டாம்பூச்சி
வைத்த பெயர் சொல்லும்போதெல்லாம்
அருகில் வந்து போகிறது
--------------
கடைசி முழப்பூ
வைத்துக் கொண்டு கிளம்புகிறாள்
பூக்காரி
--------------
விடுமுறை தினம்
கரும்பலகை எண்கள்
ஏமாற்றத்துடன் பார்க்கின்றன பெஞ்சுகளை
--------------
இந்த பேருந்திலும்
கேட்க வாய்த்தது
குழந்தையின் மழலை
--------------
செவ்வகத்தில் ஊறும் எறும்பு
போடுகிறது
வட்டங்களை
-------------
இறந்து போனவர்
வரைந்த ஓவியத்தின்
கண்களிலும் கண்ணீர்
-------------
கோயில் மணி
அடிக்கும்போதெல்லாம் திரும்புகிறது
கட்டப்பட்டிருக்கும் மாடு
--------------
நான் அடித்தபோது
உனக்கு வலித்ததா

அடித்தபோது
அவ்வளவாக வலிக்கவில்லை

கேட்டபோது
நிறையவே வலித்தது

Monday, April 19, 2010

தெரிதல்

இருந்தும் தெரிந்தது
தையல்காரர் சட்டையில்
ஒளிந்திருந்த கிழிசல்

தொலைதல்

துர்கனவில்
தொலைந்து போனேன்
நீ அங்கிருந்தாய்
நல்வரமாய்
என்னை வரவேற்க்க

Saturday, April 17, 2010

நடத்தல்

போகும் வழியில்
இறக்கி விடுகிறேன்
எப்போதும் நடக்கும்
நண்பரைக் கூப்பிட்டேன்

கால்தான் வாகனம் எனக்கு
மத்த வாகனம் எதுக்கு
புன்னகைத்தபடியே
நடந்து போனார்

சில வரிகள்

சந்தை தொலையாது
மகளும் தொலைய மாட்டாள்
தேடுகிறாள் தாய்
---------------
பேசிக்கொண்டே இருந்த பெண்
நிறுத்திய பிறகும்
பேசுவது போலவே தெரிந்தாள்
---------------
மீனே
கடல் பற்றிய
ஒரு ரகசியம் சொல்
உன்னைக் கடலில்
விட்டு விடுகிறேன்
------------
இல்லாவிட்டால் என்ன
விரல் கழுத்தில் ஊர்ந்து
உணரும் நகையை
-------------

Monday, April 12, 2010

மழை பார்வைகள்

எல்லோரும் தூங்குகிறார்கள்
குழந்தையை அழைக்கிறது
மழை
-------------
கூப்பிட்ட மேகம்
வந்து சேர்ந்தது
மழையாய்
-------------------

அன்பின் வரிகள்

1-

அன்பை குழைத்து
வரையும் புன்னகை
அழிவதே இல்லை

2-

ஒரே ஒரு முத்தத்தில்
திறந்து கொண்டது
காதல்

3-

சாந்தமாக பார்க்கிறாய்
வடிகிறது
என் கோபம்

Saturday, April 10, 2010

கேட்டல்

ஓயாமல்
கண் சிமிட்டிய
நட்சத்திரத்திடம் கேட்டேன்
நீ எப்போது
தூங்குவாய்

விழித்திருக்கும் போது
பதில் வந்தது

வேண்டுதல்

சாமிப் படங்கள்
விற்க வேண்டும்
சாமியிடம் வேண்டுகிறார்

பார்க்கவில்லை

வெகு சீக்கிரம்
மேல் பர்த்தில்
ஏறி படுத்துக் கொண்டவர்
பார்க்கவில்லை
கூடவே வந்த நிலவை

Thursday, April 8, 2010

சாத்தியம்

பறவையின் சிறகில்
ஒளிந்த கனவு
இந்த வரிக்குப் பின்
பறத்தலை
சாத்தியமாக்கியது கவிதை
கனவுடன் சேர்ந்து

Wednesday, April 7, 2010

யாரும் என்னுடன் இல்லை

1-

எண்களைப் படிக்கும் சிறுமி
இருபத்து மூன்றாவது மாடியிலிருந்து
இறங்கும் லிப்ட்

2-

யாரும் என்னுடன் இல்லை
எழுதிய வரி இருக்கிறது
என்னுடன்

3-

எப்போது படித்தாலும்
புதிதாகவே இருக்கிறது
அப்பாவின் கடிதம்

4-

தனிமையைத்
தின்கிறது
சுவர் பல்லி

5-

சவப்பெட்டி செய்கிறவன்
அதில் விழுந்து மரணிக்கின்றன
வியர்வைத் துளிகள்

6-

மணலில் பிதுங்கிய
வளையல் துண்டு
குத்துகிறது காலில்

7-

அன்புடையீர்
மன்னிக்கப் பழகிக் கொள்ளுங்கள்
என் குற்றங்களை
வெளியிடப் போகிறேன்

8-

என் மேல்
ஏறி நின்று
பார்க்க வேண்டும்
எல்லாவற்றையும்

9-

உடைந்த மீன் தொட்டி
நிதானமாக
பொறுக்குகிறார்கள்

உனக்குள்

நீ எனக்குள்
இருக்கும் வரம்
நான் உனக்குள்
இருக்கும் தவம்

Sunday, April 4, 2010

கதை

பாட்டி சொன்ன கதையில்
மழை பெய்தது
கதையில் நனைந்த குழந்தை
மழையைக் கேட்டது

அப்பா

உன்ன விட்டுகூட
இருக்க முடியும்
ஊரவிட்டுட்டு
இருக்க முடியாதுப்பா

வந்த களைப்பு வடிவதற்குள்
கிளம்பிப்போனார் அப்பா

Thursday, April 1, 2010

நினைவுகளும் மெளனங்களும்

1-

பூங்காவில் குழந்தைகள்
பெரியவர் கண்களில்
குளமிடும் பால்யம்

2-

சென்ற முறை
விழுந்த நான்
தூக்கிக் கொண்டிருந்தேன்
இந்த முறை
விழாமல் என்னை

3-

அதற்கு முன்பாக
தூக்கு கயிறை
வரைந்து பார்த்தான்
ஊர்ந்த எறும்பை
ஊதித்தள்ளிவிட்டு

4-

காலியான வீடு
நிரம்பிக் கிடக்கும்
நினைவுகளும் மெளனங்களும்

5-

வாசித்தவன் தூக்கத்தில்
புல்லாங்குழல் கேட்கும்
ரயில் சத்தம்

6-

விளையாடுகிறது
குழந்தையின் மழலையில்
நிலவு

7-

முன் ரயிலில் நிகழ்ந்திருக்கிறது
தண்டவாளத்தில்
ரத்தத்தின் வரைபடம்

தாளெங்கும்

அன்புடன் என்று
திரும்ப திரும்ப எழுதி
பேனாவை சரிபார்க்கிறான்

பேனாவை வாங்குபவள்
தன் பெயரை
எழுதி எழுதி பரிசோதிக்கிறாள்

தாளெங்கும்
அன்பும் பெயரும்

Monday, March 29, 2010

ஓட்டம்

களைப்பாக இருக்கிறீர்களே
உங்களால் ஓடமுடியுமா
இது ஓடிவந்ததால்
வந்த களைப்பு
ஓடினால்
ஓடிவிடும்

Tuesday, March 23, 2010

முடியாது

நான் நிறம் மாறுவதை
உங்கள் நிறங்களில்
கொண்டு வர முடியுமா

முடியாது
நிறங்கள் தம்மை
மாற்றிக் கொள்வதில்லை
உம்மைப் போல

தொலைந்த பாதைகள்

எழுதியதை
திருத்தச் சொல்கிறாய்
திருத்தியதை
கிழிக்கச் சொல்கிறாய்
இதையே திரும்ப திரும்ப
செய்யச் சொல்கிறாய்

எனக்கும் எழுத்துக்கும்
இடையில்
தொலைந்த பாதைகளைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்
உன் கைபிடித்தபடி

கணக்குகள்

விடையை நோக்கி கணக்கு
கொண்டு போகுமெனில்
கணக்கை நோக்கி
கொண்டு போவேன் என்னை

Monday, March 22, 2010

குவியம்

உன் பிரியங்களை
எழுதிக் குவித்துவிட்டு
அதன் மேல்
ஏறிக்கொண்டிருந்தேன்
எறும்பைப் போல

Sunday, March 21, 2010

எம் தாகம்

உங்கள் கைவழி
விழும் நீரில்
வழியும்
எம் தாகம்

நீங்கள் வீணாக்குவது
எங்கள் நதியை

முடிவு

சண்டை முடிவுக்கு வந்தது
சமாதான கொடி
இறந்து போயிருந்தது

பிம்பம்

உறுத்துகிறது
உன் பிம்பம்
ஒப்பனை உடைத்து
வெளியே வா

உச்சி

உச்சி
காண வேண்டும்

உச்சியிலிருந்து
காண வேண்டும்

மலையேறுகிறேன்
மலையுடன்

Saturday, March 20, 2010

வேகம்

உழைத்து முடித்தவன்
தன் வியர்வையை
பார்த்துச் சொன்னான்

ஏன் சோம்பேறித்தனமாக
உருள்கிறாய்
வேகமாய் போ

Sunday, March 14, 2010

கேட்கிறது

கொண்டு வந்த அன்பை
கொண்டு செல்கிறாய்
சிந்திய வார்த்தைகளில்
மின்னிடும் அன்பு
ஏக்கமாய் கேட்கிறது
அங்கு செல்லவா
இங்கு வரவா

Monday, March 8, 2010

ஓராயிரம்

உன்னைப் பற்றி
ஒன்றை சொல்
ஒன்றே ஓன்றை சொல்
போதும்
சற்றே முகம் தூக்கி
ஒரு கணம் பார்த்து
பின் தலை
குனிந்து கொண்டாய்
ஓராயிரம் சொன்னது
போலிருந்தது

நட்சத்திரங்கள்

ஒரு நட்சத்திரத்திற்கு
உன் பெயர் வைத்தேன்

மறுநாள் வந்து
கூப்பிட்டுப் பார்த்தேன்

எல்லா நட்சத்திரங்களும்
திரும்பி பார்த்தன

Saturday, March 6, 2010

கேட்க வேண்டும்

திருக்குறளின்
கைபிடித்துப் போனால்
திருவள்ளுவரை
அடைய முடியுமா
இன்னும்
அவர் பேச
கேட்க வேண்டும்

Friday, March 5, 2010

இன்றெனும் செடி

குவிந்து கிடக்கும்
என் மரணத்தின் மேல்
முளைத்துச் சிரிக்கும்
இன்றெனும் செடி
நாளை எப்படியோ
தெரியாது

Friday, February 26, 2010

யுத்த தர்மம்

போரில்
நீங்கள் எத்தனை பேரை
கொன்றிருப்பீர்கள்

கணக்கெதுவும் இல்லை
சுமார் ஐம்பது…அறுபது…

நல்லது
போரும் மரணங்களும்
என்ற தலைப்பில்
உங்களின் நிகழ்வுகளை
ஒவ்வொரு வாரமும்
எழுத முடியுமா

மன்னிக்கவும்
ஒருமுறை கொன்றவர்களை
மீண்டும் கொல்வதென்பது
என் யுத்த தர்மத்திற்கு
எதிரானது

யாரோ எறிந்த கல்

பறவையின் மொழியில் நானும்
என் மொழியில் பறவையும்
பேசிக் கொண்டிருந்தோம்
யாரோ எறிந்த கல்
வார்த்தைகளை
கலைக்கும் வரை

Saturday, February 20, 2010

அவளுக்கான வரிகள்

1-

அன்பின் துளி
போதும்
நீந்தி மகிழவும்
நிறைவாய்
கரையேறவும்

2-

ஒற்றை வரி
கவிதைபோல
புன்னகைக்கிறாய்
இதில் என்னால்
படிக்க முடிகிறது
நிறைய பக்கங்களை

3-

அப்போதுதான்
உன் சொற்களில்
பனித்துளிகள் ஒட்டி
இருந்ததைப் பார்த்தேன்

அதுவரை
இருந்ததற்காக
நன்றி சொன்னேன்

4-

பிறகு அவர்கள்
முத்தத்தின் குழந்தைகள்
ஆனார்கள்

Monday, February 15, 2010

அறிமுகம்

கடவுளிடம்
என் நட்பை
சொல்லிக்கொண்டிருந்தேன்
உன்னை அறிமுகப்படுத்திவிட்டு
மறைந்து போனார்

நடுநிசியில்

நடுநிசியில்
விழித்தெழும் முத்தம்
கேட்கிறது
நீ எங்கே என

குறிப்புகள்

இமை மூடிப் படிக்கிறேன்
மனதிற்குள்
நீ எழுதிவிட்டுப் போன
குறிப்புகளை

Tuesday, February 9, 2010

நதி போகிறது

நதி போகிறது
நதி போகிறது
நிற்காமல் போகிறது

நதி போகிறது
நதி போகிறது
நிற்காமல் போகிறது
என்னை நிற்கவிடாமல்

நதி போகிறது
நதி போகிறது

உனக்கானது

1-

சுமந்து சுமந்து
வலிக்கிறது
இறங்கு
கனவிலிருந்து

2-

ஒற்றை உயிர்
எத்தனைமுறை
கொல்வாய்

Sunday, February 7, 2010

வரைபடம்

1-

அன்பின் வண்ணங்களில்
உருவாகிறது
புன்னகையின் வரைபடம்

2-

புல்லாங்குழலின்
இசை கேட்டு
அசைகிறது மூங்கில்

3-

சென்ற அலை
திரும்பியது
திரும்பிய அலை
சென்றது

Tuesday, February 2, 2010

விட்டு விட்டு

அறையைத் தாழ்பாளிட்டு
தற்கொலை செய்தேன்
பின் கதவைத் திறந்து
வெளியேறினேன்
தற்கொலையை
விட்டு விட்டு

பயணத்தின் நடுவே...

1-

எந்த இசைக்குள் அடங்கும்
இந்த மழையின்
சத்தம்

2-

நண்பன் சொன்ன கவிதை
பாடல் போல் ஒலிக்கிறது
பயணத்தின் நடுவே

3-

அழுகை நிறுத்திய
குழந்தையின் கன்னத்தில்
பிஞ்சுத்துளி சிரிக்கிறது

4-

கண் விழித்த சொல்
உறங்கிக் கொண்டிருக்கலாம்
ஏதோ ஒரு
கவிதையில்

Friday, January 29, 2010

மழையில்

யாருக்கும் தெரியாது
என்றெண்ணி
நடந்தேன் மழையில்

மழைக்குத் தெரிந்தது
அது என்னைக் கேட்டது

நீயேன் அழுகிறாய்

என்னை

மன்னிக்கிறேன்
ஒவ்வொரு முறையும்
என்னை

நீங்களும்

நான் எழுதும் கதையில்
நீங்களும்
உங்கள் கதையை
எழுதியபடி

மீட்டெடுத்தல்

அடைபட்ட வார்த்தைகளை
மீட்டெடுக்க வேண்டும்
கவிதையிலிருந்து

கூடவே வந்த மழை

கூடவே வந்த மழை
பயணத்தை முடித்திருந்தது
ஜன்னல் கம்பிகளில்
துளிகளை விட்டு விட்டு

Monday, January 18, 2010

நீ

ஊதி ஊதி
நீ அணைத்து
கொண்டு போனாய்
ஒளியை

மோதி மோதி
நான் உடைத்து
கடந்து போனேன்
இருளை

பழகு

தப்புதப்பாக
கணக்குப் போட்டாலும்
புன்னகைத்தபடியே
திருத்தி
சொல்லிக் கொடுப்பார்
கணக்கு வாத்தியார்

பிரம்பு பயன்படுத்தாத
அவர் பிரியம்
மகத்தானது

கூடவே சொல்லுவார்
வாழ்க்கை ஒரு
கணக்கு மாதிரி
அத தப்புவராம
போடப் பழகு

Friday, January 15, 2010

ஒவ்வொரு நாளும்

நீ சொன்ன
ஒரு நாள்
எந்நாள்
என்று
அந்நாள்
பார்த்துக் கிடக்க
போய்க்கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நாளும்

சேமித்தல்

நீங்கள் எறிந்த
எல்லா கற்களையும்
சேமித்து வைத்திருக்கிறது குளம்

அது தந்த
எல்லா புன்னகைகளையும்
சேமித்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்

Tuesday, January 12, 2010

உனக்கான வரிகள்

1-

வலிக்கச் செய்யும்
உன் எல்லா
வார்த்தைகளையும்
மருந்தாக்கிக் கொள்கிறேன்

நோயாளியாக வெளியேற
விருப்பமில்லை

2-

நீளும் இரவில்
ஓடும் கணங்களில்
உன் நினைவுகள்
பயணிக்கிறது

கண்மூடும் போதெல்லாம்
அதன் குளம்படிச் சத்தம்
எழுப்பி விடுகிறது

3-

ஆடிச்செல்லவில்லை என்று
பொய் சொல்லாதே
இதயத்தில் கிடக்கிறது
உன் ஒற்றைக் கொலுசு

4-

பின்னிரவில் வந்து
எழுப்பிவிட்டுச் சென்றாய்
உனக்குத் தெரியாது
முன்னிரவும் நான்
தூங்கவில்லை என்று

5-

மழைபற்றி
எழுதச் சொல்கிறாய்
நனைந்து முடிந்தேன்

6-

உன் புன்னகையை
முத்தமிட ஆசை
முடியுமா

7-

உன் கண்களின்
ஒற்றைத் துளியில்
அன்பின் பிரமாண்டம்

9-

உன் வீட்டில் வைத்திருக்கும்
கொலு பார்க்க
நான் வரவில்லை என்று
அம்மாவிடம்
கோபித்துக் கொண்டாயாம்

பொம்மைகளும் பொம்மைகளும்
நிறைந்த இடத்தில்
உன்னைப் பார்க்க
விரும்பவில்லை

9-

நீ படிக்கும்போது
உன்னை மிருதுவாய்
தடவிக் கொடுக்கும்
இந்த வார்த்தைகள்
நீ மறக்கும் போது
மெதுவாய்
வழிப்போக்கனைப்போல
வெளியேறிவிடும்

10-

நீ எனக்கும்
நான் உனக்கும்
சொல்லாதவை
சொல்லாதவைகளாக
இருந்துவிட்டுப்
போகட்டுமே

Friday, January 8, 2010

பயணம்

எறும்புபோல்
என்னை
இழுத்துச் சென்றாய்
எங்கே என்றேன்
உன் இதயத்துக்கு என்றாய்

Thursday, January 7, 2010

இசை

புல்லாங்குழலில்
மூங்கில் சேமித்த
இசை

நீண்ட பாதை

நீண்ட பாதை
நிழலில்
ஒதுங்கிய பாட்டி
காலில் தைத்த
முட்களை
எடுக்கிறாள்

எட்டி பார்க்கும்
ரத்தத் துளிகளை
சிதறிக் கிடக்கும்
பூக்களால்
துடைக்கிறாள்

Wednesday, January 6, 2010

அன்பின் குறிப்புகள்

1-
உன்னிடம்
இருக்கும் என்னை
விடுவிப்பாயா

2-

தெரிந்து கொண்டேன்
என் அன்பில்
உன் அன்பிருப்பதை

3-

உன் கண்களில்
அன்பின் வன்முறை
சொல்
இது எதுவரை

4-

என்ன பரிசு
உனக்குத் தரலாம்
கேள்விக்கு கிடைக்கவில்லை
பதில்கள்
பரிசுக்குத் தேவையில்லை
கேள்விகள்

5-

நீ அருகில் இல்லை
அனாதையாய் விழுகிறது
கண்ணீர்

6-

உன் முகம் துடைத்த
கைக்குட்டையில்
புன்னகைகள்
தேடாதே
என்னிடமே இருக்கட்டும்

Sunday, January 3, 2010

உன் பெயர்

உன் பிரியங்களின்
கூட்டுத் தொகையை
எப்படிப் போட்டுப் பார்த்தாலும்
சரியாக வரக்காணோம்

எண்களுக்கு பதில்
உன் பெயரே
முன்வந்து
சிரிக்கிறது