Thursday, July 30, 2009

குழந்தைகள்

பூங்காவில் மொத்தம்
ஏழு குழந்தைகள் விளையாடினர்
என் பால்யத்தையும்
சேர்த்து எட்டு

பயங்கள்

ஒவ்வொரு பயமாக
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்
பயமாக இருக்கிறது
வேறு பயங்கள்
சேர்ந்து விடுமோ என்று
பொம்மைகளை விற்கும் போதெல்லாம்
குழந்தையாகி விடுகிறார்
கடைக்காரரும்
ஒரு கவிதையில்
வைத்துப் பார்க்க வேண்டும்
பேருந்தில் தரிசித்த
குழந்தையின் புன்னகையை

Sunday, July 26, 2009

சிறுமியின் ஊர்தி

ரயில் வரைந்த காகிதத்தில்
கப்பல் செய்த சிறுமி
மழை நீரில் விட்டு
எல்லோருக்கும் காட்டி
சந்தோஷத்துடன் சொல்கிறாள்
ரயில் கப்பல்ல போவுது

கரும்பலகை எண்கள்

கணக்கு வாத்தியார் பரமசிவம்
இறந்து போனார்
மாணவர்களோடு
அஞ்சலி செய்யும்
கரும்பலகை எண்கள்

Saturday, July 25, 2009

வந்து போகும்…

ஓடாத மின்விசிறி
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்

Thursday, July 23, 2009

இன்னொரு எண்ணம்

எங்கோ என்னை
இழுத்துப் போய்
விட்டுப் போன
எண்ணத்திடம் கேட்டேன்
எப்படித் திரும்புவது
இரு இன்னொரு எண்ணம்
வரும் என்றது
இருள் தரையில்
விழாமல் சுழல்கிறது
ஒளி பம்பரம்

அம்மா

பார்த்துப் பார்த்து
சமைத்துப் போடுகிறாள் அம்மா
அம்மாவைப் பார்த்துக்கொள்கிறது
சமையலறை

Wednesday, July 22, 2009

புறாக்கள்

எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள்
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று

Tuesday, July 21, 2009

முகவரி

நதியிடம் முகவரி கேட்டேன்
வழியெல்லாம் என் விலாசம்தான்
படித்துக் கொண்டே வா என்றது

Saturday, July 18, 2009

நாம் காதலுக்கு வெளியே
சந்தித்துக் கொண்டோம்
பின் காதலுக்குள்ளே பேசியதை
பேச ஆரம்பித்தோம்

Monday, July 13, 2009

கடைசி வரை

கடைசி வரை
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்

எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்

நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்

அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது

படகும் மீனும்

படகு கேட்டது மீனிடம்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்

மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்

பதில்கள்

நீ பதில் சொல்வது
என் கேள்விக்குப் போதுமானது

நீயே பதிலாவது
என் வாழ்க்கைக்குத் தேவையானது

Saturday, July 11, 2009

சமாதானம்

குடை எடுத்து வராத பெரியவர்
எப்போது நிற்கும் என்கிறார்

பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்
நான் ஏறாத
ரயிலிலிருந்து இறங்குகிறேன்
இறங்க வேண்டிய இடத்தில்
தாத்தாவின் செருப்புகளை
நனைக்கிறது மழை
தாத்தாவைத் தேடியபடி
கொன்றுபோட்ட மலைப்பாம்பு
நெளிந்து கொண்டிருந்தது
மரணத்தின் மேல்
தொப்பி விற்பவன்
தலையில் அணிந்து சொல்கிறான்
வெயிலை
ஒரு கோடி மெளனங்களோடு
நீ விடை பெறுகிறாய்
ஒரு சொட்டுக் கண்ணீரோடு
நான் திரும்புகிறேன்

Friday, July 3, 2009

பார்வைகள்

உன் முதலிரண்டு பார்வைகளை
இப்படி எழுதலாம்
போரும் அமைதியும்

அன்பு வரைந்த புள்ளி

அன்பு வரைந்த புள்ளியில்
நீ கவிதை எடுக்கிறாய்
நான் உன்னை
எடுக்கிறேன்