Monday, March 26, 2012

குழந்தை

எனக்கும்
 எழுதத் தெரியும்
 என்கிறது குழந்தை
 கிறுக்கியபடி

Monday, March 12, 2012

கடல் வரையும் குழந்தை

மீன் தொட்டியும்
மீன்களும்
வரையச் சொல்கிறார் அப்பா

கடல் வரைகிறாள் குழந்தை

காரணம் கேட்கிறார் அப்பா

வண்ணமாய் சிரித்து
விளக்குகிறாள் குழந்தை

இதுல
பல்லாயிரக்கணக்கான மீன்களும்
ஆயிரக்கணக்கான மீன் தொட்டிகளும்
இருக்குப்பா

ஜன்னல் சாரல்

நனையாதே வா என்று
அம்மா இழுத்து வந்து விட
ஜன்னல் சாரலை
மழையாக்கும் குழந்தை

அம்மாவின் முத்தத்தில்

அம்மாவின் முத்தத்தில்
காலத்தின் ஈரமும்
கலந்திருக்கிறது
அதனால்தான்
இது இன்னும்
காயாமல் இருக்கிறது

Thursday, March 8, 2012

அதிக ஆயுளுடன்

குளிர்சாதனப் பெட்டிக்குள்
வைக்கப்பட்டிருக்கும்
பழங்களைப் போல
உன் குறுஞ்செய்திகள்
என் அலைபேசிக்குள்
அதே சுவையுடன்
அதிக ஆயுளுடன்

பல

கொறித்த வரிகள்
எல்லாம்
செறிக்கவில்லை
கனவைக் கலைக்கும்
பல

Tuesday, March 6, 2012

நினைவை அடுக்குதல்

நினைவின் மேல்
நினைவை அடுக்கி
படியாக்கி
மேலேறிப் போய்
உன் பெயர் வைத்த
நட்சத்திரத்திற்கு
ஒரு முத்தம்
பதித்துவிட்டுத்
திரும்பினேன்