Wednesday, April 29, 2009

பார்வைகள்

நீ என்னைப் பார்த்து பேசுவது
காதலைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது
நான் உன்னைப் பார்த்துப் பேசுவது
கவிதையைப் பார்த்துப் பேசுவது
போலிருக்கிறது

Wednesday, April 22, 2009

உதடுகள்

நாம்
முத்தம் கொடுக்கும்
நெருக்கத்தில்
பேசிக்கொண்டிருக்கிறோம்
புத்திசாலி உதடுகள்
புரிந்து கொண்டால் சரி

Monday, April 20, 2009

மனச்சுவர்

உன் நினைவுகள்
வானவில்லாய்
ஒட்டடை படிந்த
மனச் சுவரில்
நம் உரையாடல் நடுவே
உரையாடிக் கொண்டிருந்தது
நம் மெளனமும்
ஒளித்து வைத்த கண்ணீர்
தூறிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகளில்
விடாது பெய்யும் மழை
ஒதுங்கி நிற்கும் பெண்ணின்
கைபேசியிலும்

Friday, April 10, 2009

மெளனத்தின் ஒப்பனை

உன் உதடுகளில்
மெளனத்தின் ஒப்பனை
குரல் உயர்த்திப் பேசுகின்றன
உன் கண்கள்

குறுங்கவிதை

ஒரு குறுங்கவிதையை
சொல்லிவிட்டுப் போகின்றன
உன் கண்கள்
அதை திரும்ப
எழுதிப் பார்க்கையில்
முடிந்தபாடில்லை

நீண்ட காலம்

நீண்ட காலமாக நாம்
பேசிக் கொண்டிருந்தோம்
காலத்தில் பதிவாகும்படி
பேசவே இல்லை

Friday, April 3, 2009

அடிக்கடி நினைவுகளில்
உன்னை தொலைத்து விடுகிறேன்
வேறு சில நினைவுகளில் வந்து
நீயே சேர்ந்து கொள்கிறாய்

மீட்டெடுத்தல்

நான் எழுத
மறந்து போன கவிதையை
நீ திரும்ப சொன்னாய்
அழகாக

பின்னொரு நாளில்
மீண்டும் கேட்டபோது
அது உனக்கும்
மறந்து போயிருந்தது

ஆயுள் கெட்டியான
கவிதை எனில்
அது மறதியை
ஜெயித்து வாழும் என்றேன்

நீ சிரித்தபடியே
சொல்லிப் பார்த்தாய்
அதே கவிதையை
உனது வார்த்தைகளில்

என் மறதிக்குள்
புதைந்து போன
கவிதையின்
முதல் சொல்
ஒரு செடிபோல்
எட்டிப் பார்த்தது
பின் முழுதும் வந்தது

நம்மை மீட்டெடுத்தது கவிதையா
நாம் மீட்டெடுத்தது கவிதையா
என்று இதன் பிறகு
பேசத் தொடங்கினோம்
மழை அள்ளி விளையாடும்
குழந்தைகளைப்போல