Saturday, December 26, 2009

எக்காலம்

ஒளிந்து கொண்டிருக்கும்
கவிதைக்குள்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
கவிதை
கண்டெடுப்பது
எக்காலம்

விட்டுச் செல்லுதல்

தின்று முடித்த கையில்
முளைத்திருந்தது
பழம் விட்டுச் சென்ற
மரம்

Friday, December 25, 2009

நீந்துதல்

வண்ணங்களில்
நீந்துகிறது
சிறுமி வரைந்த மீன்

Saturday, December 19, 2009

மன்னிப்பு

புன்னகைத்து
மன்னிப்பு கேட்கிறாய்
தாமதமாய்
வந்ததற்காக

என்னால்
முடியும்

காத்திருந்து
போன காலம்
மன்னிக்குமா
தெரியவில்லை

கரையில்

கடலில்
மெளனங்களை
கரைத்துவிட்டு
உட்கார்ந்தோம்

கரை ஒதுங்கிய
நுரை இரண்டில்
உன் பெயரும்
என் பெயரும்

Friday, December 18, 2009

ஒளி

ஒளி
துளைப்
போட
கரையும் மெழுகு
கரையும்
அகத்தினுள்
புகுந்து
உள் கரைந்து
ஒளிப்போயடையும்
பிரபஞ்சத்திடம்

வழி

வழிப்போக்கனிடம்
விலாசத்தைக் கேட்டேன்
கொடுத்துவிட்டுப் போனான்
வழியை

இன்றும் நானும்

இன்று
நான்
எதுவும்
எழுத இல்லை

இன்றும்
என்னை
எழுத
வைக்கவில்லை

இன்றும் நானும்
மொழியற்று
எழுத்தற்று
எதுவுமற்று

Tuesday, December 15, 2009

விளையாட்டு

அலையோடு
விளையாடும்
குழந்தை

குழந்தையோடு
விளையாடும்
கடல்

இது

எங்களோடு
வசிக்கும் பறவைக்கு
இது கூடு

பறவையோடு
வசிக்கும் எங்களுக்கு
இது வீடு

Sunday, December 13, 2009

வா

கீழிருந்து
வானத்தைப்
பார்த்தது போதும்
வானத்திலிருந்தே
வானத்தைப்
பார்க்கலாம்
வா

Friday, December 11, 2009

சுவரில்

பூச்சியைத் தேடும்
பல்லியைப் போல்
சுவரில்
நிழலாடும்
தூக்குக் கயிறு

எதுவும்

நீயாய்
எதுவும்
தரவில்லை
ஆனாலும்
எவ்வளவு
முத்தங்களைச்
சேர்த்து வைத்திருக்கிறேன்
தெரியமா?

அவள்

அகப்பட்டுக்கொண்ட
விலைமாது
நீதிமன்றத்தில் கத்தினாள்
என் தவறில்
தவறில்லை

ஏன்

ஏன் கோபப்படுகிறீர்கள்
என்கிறார்
கோபப்பட வைத்தவர்

கதவுகள்

கதவுகள்
மூடிக் கொண்டன
உலகம்
திறந்திருக்கிறது

Wednesday, December 9, 2009

முன்கணம்

எழுதுவதற்கு
முன்கணம் வரை
கேட்டுப்போகாமல் இருந்தது
இந்தக் கவிதை

கேள்விகள்

என்னைக் கேள்விகள்
கேட்டுக் கொண்டே
இருந்தீர்கள்
கேள்விகளுக்குள்
நுழைந்து போய்
பார்த்த போது
உள்ளீடற்ற உங்கள்
உருவம் தெரிந்தது
ஒரு புன்முறுவலோடு
வெளியே வந்து
பார்க்க
நீங்கள் இருந்த இடத்தில்
எறும்பு அளவுக்கு ஒரு
கேள்வி இருந்தது
துடித்தபடி

யாரும்

புகைப்பட கலைஞனின்
புன்னகையைப் போல
புகைப்படத்தில்
இருந்த யாரும்
புன்னகைக்கவே இல்லை

நீண்ட நாட்கள்

நீண்ட நாட்களாய்
நாம் சந்திக்கவே இல்லை
நீண்ட
நாட்களும்
திரும்பவே இல்லை

ஞாபகக் குவியல்

இது எல்லாமே
உன் ஞாபகக் குவியல்
நீ ஒன்றை
கலைத்துப் போட்டாலும்
மொத்த சரடும்
அறுந்து விடும்

Tuesday, December 1, 2009

இல்லாத கோப்பை

இல்லாத கோப்பையிலும்
நிரப்பப் பழகுகிறேன்

வேண்டும்
காலத்தின் தாகத்திற்கும்
எனக்கும்

நம்மவன்

துடைக்க மனமின்றி
உன் கண்ணீரை
இந்த பாட்டிலில்
நிரப்பிக்கொள் என்று
தருபவனிடமிருந்து வாங்கி
அதை உடைத்து
அவன் முகத்தைக் கீறி
சிந்தும் ரத்தத்தை
உன் கைகளில்
ஏந்திக்கொள்
எனச் சொல்லிவிட்டுப் போகிறவன்
சொரணை இழக்காத நம்மவன்

புத்திசாலி

அதை
புத்திசாலி மீன் என்று
ஒத்துக் கொண்டேன்
வாயைத் திறந்து
தின்று கொண்டிருந்த
தூண்டிலைக் காட்டியபோது