Saturday, October 31, 2009

உனது பதிலில்...

நீ கண்ணீரை மட்டும்
வரைந்தாய்

இது
எந்த கண்களின் கண்ணீர்
கேட்டேன்

சிரித்தபடியே சொன்னாய்
கண்கள் இருந்தால்தான்
கண்ணீர் வர வேண்டுமா

குழந்தையிடமிருந்து...

குழந்தையின் உதட்டில்
சிரிக்கிறது சொர்க்கம்
குழந்தையின் கண்களில்
வழிகிறது பிரபஞ்சம்

Sunday, October 25, 2009

எவ்வளவோ தெரியுது

அப்பாவும் மகனும்
பார்த்துக் கொண்டிருந்தனர்

தந்தை திரும்ப திரும்ப
சொன்னார்
இங்கிருந்து பார் என்று

ஆச்சர்யத்தை நிறுத்தி
அப்பா சொன்னபடி செய்தான்

பிறகு சொன்னான்

அப்பா நீங்க சொன்னபடி பாத்தா
எனக்கு நீங்கதான் தெரியிறீங்க
என்படி பாத்தா
எவ்வளவோ தெரியுது

Friday, October 23, 2009

கேட்க முடியும்

நீங்கள்
ரத்தத்தை மட்டுமே
வரைந்து பார்க்கும் போது
துளிகளின் துல்லியத்தில்
உங்களால்
கேட்க முடியும்
மரணத்தின் குரலையும்

ஒன்றுமில்லை

வியப்பதற்கு எதுவுமில்லை
வியந்தபின்
உவப்பதற்கு
ஒன்றுமில்லை

தெரியவில்லை

எனக்குத் தெரியவில்லை
என்பது
எனக்குத்
தெரியவில்லை

Saturday, October 17, 2009

விழுதல்

கிளை பிடித்து
தொங்குகிறீர்கள்
விழ மாட்டீர்கள்

பயம் பிடித்து
தொங்குகிறீர்கள்
விழுந்து விடுவீர்கள்

பார்வைகள்

பார்வை இல்லாதவன் என்று
என்னைச் சொல்லாதீர்கள்
நான் அன்பால்
அனைத்தையும் பார்ப்பவன்

Wednesday, October 14, 2009

பொட்டு

கண்ணாடியில்
நீ மறந்து போயிருக்கும் பொட்டு

நான் பார்க்கும் போதெல்லாம்
மாறுகிறது வானவில்லாய்

Saturday, October 10, 2009

மற்றும் பலர்

அந்த படத்தில் நடித்த
மற்றும் பலரில்
நானும் ஒருவன் என்றார்
இடைவேளையில்
தேநீர் அருந்திய ஒருவர்
மற்றவரிடம்

கடவுளின் முகம்

வண்ணங்களிலேயே
இருக்கிறது என் முகம்
வரைய வேண்டாம்
என்கிறார் கடவுள்

Wednesday, October 7, 2009

மலையிலிருந்து...

மலையிலிருந்து
இறங்கியபோது
என் கையில்
கவிதை இருந்தது
கவிதையின் கையில்
மலை இருந்தது

Monday, October 5, 2009

திரி

உன் பிரிவுச்
சுடரில் எரிகிறது
என் நினைவுத் திரி

Friday, October 2, 2009

காளீ

குழந்தையிடமிருந்து திரும்பி
தன் பக்கம்
படுக்கச் சொல்கிறான் கணவன்

தன் பக்கம்
இழுக்கிறது குழந்தை

நடுநிசியை முகர்ந்தபடி
இரண்டுமாகிறாள்
காளீ