Saturday, November 28, 2009

நிற்கவில்லை

ஓடுவது நிற்கவில்லை
எனக்குள்
ஓடுவதும்

வந்தவள்

தாகத்திற்க்கு
நீர் அள்ள வந்தவள்
பருகிக் கொண்டிருக்கிறாள்
கிணற்றில்
ஒளிரும் நிலவை

Wednesday, November 25, 2009

நொடியில்

உடைத்துப் பார்த்த நொடியில்
விரிந்து கிடக்கும்
காலம்

Tuesday, November 24, 2009

இரண்டு கதைகள்

இரண்டு கதைகள் இருக்கிறது
ஒன்று
கண்ணீரை வரச்செய்யும்
இன்னொன்று
சிரிப்பை வரச்செய்யும்
எந்த கதை
உங்களுக்கு வேண்டும்

எனக்கு வேண்டும்
கண்ணீரை நிறுத்தி
சிரிப்பை தொடரச்
செய்யும் கதை

ஞாபக தானியங்கள்

தனிமை
ஞாபக தானியங்களைத்
தின்கிறது
நான் பசியோடு
உன் வருகை பார்த்து

Saturday, November 21, 2009

ஆனாலும்...

மெதுவாகத்தான் போகிறது
ஆனாலும் நிற்கவில்லை
அந்த ஆமை

தேநீர் உரையாடல்

தேநீர் அருந்திய
நேரத்துக்குள்
பேசி முடித்தோம்

நம் உரையாடலில்
இருந்தன
இன்னும் தேநீருக்கான
நேரங்கள்

Wednesday, November 18, 2009

தூரம்

அருகில் இருக்கிறோம்
பார்க்க மறுக்கும் மனம்
தூரம் பார்க்கிறது

நினைவில்

ஆணுறை
வாங்கிக் கொள்ளலாம்
கூப்பிட்டால்
வந்து விடுவாள்
நினைவில் புன்னகைக்கும்
மனைவியைத் தவிர்த்து
எப்படிப் போக

Saturday, November 14, 2009

உங்களுக்கு

உங்கள் துப்பாக்கிக் குறிகளில்
இன்று எங்கள்
உயிர்கள் வீழும்
நாளை எங்கள்
விடுதலை வாழும்

சருகு

இந்த இடத்தில்
உதிர்ந்து கிடக்கும் சருகு
உயிர்த்தெழுந்து
மரமாகி
இடத்தை அடைக்கிறது
விழவிடாத
சருகுகளோடு காற்றில்
உரையாடுகிறது
மகிழ்கிறது
மீண்டும் சருகாகி
நிகழ்ந்ததை
நினைத்துப் பார்க்கிறது
காற்றில் படபடக்கிறது
கால்பட்டு
இறந்து போகிறது

பேசுதல்

நான் அபத்தமாக
பேசியதாக
சொன்ன நண்பர்
அதையே
பேசிக்கொண்டிருந்தார்
இன்னும் அபத்தமாக

உணர்தல்

கவிதையில் ஓடியது நதி
விரல்கள் உணர
கையில் துள்ளின வார்த்தைகள்

Monday, November 9, 2009

குளிரில்

குளிரில்
இறந்து போனவனின்
உடலில்
நடுங்கிக் கொண்டிருந்தது
குளிர்

வடு

தடவும் போதெல்லாம்
வலியைத் தருகிறது
பிரிவின் வடு

Sunday, November 8, 2009

இறந்துபோனவர்களின் நகரம்

எல்லோரும்
இறந்துபோன நகரத்தில்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்

மரண வாசனை
நின்றபாடில்லை

நீ எப்போது
இறந்து போவாய்
காலடியில் தட்டுப்பட்ட
ஒரு உடல் கேட்கிறது

நடுங்கச் செய்கின்றன
சாவின் பிம்பங்கள்
முடியாத அழுகுரல்களும்

தோள் வந்து அமரும்
பச்சைக்கிளி புன்னகைத்து
ஓடிப் போனது

எல்லோரும்
இறந்துபோன நகரத்திலிருந்து
வெளியேறிக் கொண்டிருந்தேன்
மரணத்தைப்
போட்டு விட்டு

Saturday, November 7, 2009

பிடிக்கும்

சத்தம் பிடிக்கும்
அமைதியிலிருந்து
தெறிக்கும் சத்தம்
அதிகம் பிடிக்கும்

பரிசு

உன் கண்களில்
எடுத்து வந்திருக்கிறாய்
எனக்கான பரிசை

எப்படி வாங்கிக் கொள்வது
எனக்குத் தெரியவில்லை

Monday, November 2, 2009

நிழலில்

கோயில் நிழலில்
உட்கார்ந்து செல்கிறார்
கடவுள் மறுப்பு
சிந்தனையாளர்

நீயும் மழையும்

நீ இருக்கும்போது
பெய்யும் மழை
எழுதாத கவிதை

நீ இல்லாதபோது
பெய்யும் மழை
எழுத வைக்கும் கவிதை

Sunday, November 1, 2009

நீ ஓடு

தேங்கிக் கிடந்த
கனவொன்று
சத்தம் போட்டது
நீ ஓடு
நான் நதியாய்
ஓட

சாலை

யார் துணையுமின்றி
அடர்த்தியாய் வாகனங்கள்
செல்லும் சாலையை
லாவகமாய்
கடந்து முடித்த மூதாட்டி
அங்கிருந்து கூப்பிடுகிறாள்
பயப்படாமல்
வரச்சொல்லி அவளை