Monday, August 31, 2009

வெள்ளைக் காகிதம்

நீ எதுவும் எழுதாமல்
அனுப்பி இருக்கும்
வெள்ளைக் காகிதத்தில்
என்னைப் பார்த்து
புன்னகைக்கும் உன் முகம்
குறும்புடன்

Sunday, August 30, 2009

ஓடு

ஓடுவது உனக்குப் பிடிக்கிறதா
கால்களிடம் கேட்டேன்
நிற்கும் போது ஓடுவதைப் பற்றி
யோசிப்பதும் பிடிக்கும் என்றது

Thursday, August 27, 2009

உனக்கு

என் விரல்களுக்கு
நீ தந்த முத்தம்
ஊர்ந்து போகிறது
உதட்டுக்கு

Wednesday, August 26, 2009

எண்ணிக்கை

விதவிதமான போதைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறான்
பீர்பாட்டில் பொறுக்குபவன்

இந்த கவிதை

இந்த கவிதையை
நான் எழுதாவிட்டாலும்
அது இருக்கும்
உங்கள் இசையில் ஒரு பாட்டாக
அவர் வண்ணத்தில் ஒரு ஓவியமாக
இவர் நடனத்தில் ஒரு அசைவாக
மற்றும் பலவாக

என் மெளனத்தில்
இன்னும் நிசப்தமாக

நான்கு கவிதைகள்

வண்ணங்கள் புன்னகைக்க
அழும் பெண் ஓவியத்தில்
கண்ணீரைத் தீட்டும் கலைஞன்
----
நீந்தத் தெரியாதவன்
பார்த்தபடி
நதி நீந்துவதை
---
இருட்டை உண்டு
கொழுக்கும் பயம்
கைப்பற்றப் பார்க்கும் பகலையும்
---
மரத்திலிருந்து
உதிர்கிறது பூ
மரத்தை சுமந்தபடி
---

Monday, August 24, 2009

பேருந்தில்...

ஓடும் பேருந்தில்
நேரெதிரில் அமர்ந்திருக்கும்
பெண்ணுக்கும் அவனுக்கும்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
இன்னொரு பயணம்

Thursday, August 20, 2009

பெயர்

பள்ளி விட்டு நீண்ட தூரம்
நடந்து வந்த சிறுவன்
நின்றிருக்கும்
தூசிப் படிந்த காரில்
எழுதிப் பார்க்கிறான்
தன் பெயரை

நடந்தும் கடந்தும்

நடந்து நடந்து போனாலும்
குறைவதில்லை தூரம்

கடந்து கடந்து முடித்தாலும்
முடிவதில்லை பயணம்

கேள்

முதுமைப் பற்றி எழுத
தாத்தாவிடம் குறிப்புகள்
கேட்டான் பேரன்
யாராவது முதியவர்களிடம் கேள்
சொல்லியபடியே
வேகமானர் அவர்

தூசி

வண்ணங்களில்
புகுந்து மீண்டவன் முழுதும்
ஓவியங்களின் தூசி

Sunday, August 16, 2009

பொம்மை

முப்பது வருடங்களுக்கு முன்
நான் உடைத்த
பொம்மையின் ஒரு பகுதியை
இன்னும் பாதுகாத்து வருகிறாள் அம்மா
ஒரு பொம்மையைப் போல

போதும்

விடை பெறும் போது
உங்கள் பெயர்
கேட்க நினைத்தேன்
புன்னகைத்தீர்கள்
இதுவே எனக்கு
போதுமானதாக இருந்தது

தெரியும்...

உங்களுக்கு
என்ன தெரியும்

எனக்கு ஒன்றும் தெரியாது
என்பது தெரியும்

Saturday, August 15, 2009

கிருஷ்ண ஜெயந்தி

எல்லா பிளாட்டிலும்
கிருஷ்ணரின் காலடித் தடங்கள்
எந்த வீட்டிற்கு
வந்து போனார் எனத்
தெரியவில்லை

Thursday, August 6, 2009

சுழன்றபடி

எழுதி முடித்த கவிதைக்கும்
எனக்கும் இடையில்
சுழன்றபடி
எழுதப்படாத கவிதைகள்

துளி

உன் பார்வையின்
ஒரு துளியை
பருகத் தொடங்குகிறேன்
இனிக்கும் நாள் இனி

Monday, August 3, 2009

வண்ணங்களை பூசிய குழந்தை
அங்குமிங்கும் ஓடி
ஓவியமாக்கியது வீட்டை