Tuesday, June 10, 2014

அழகானது

தாமதமாக வந்து 
காத்திருப்பது அழகானது 
என்றாய் 
நீண்ட காத்திருப்பு 
மிக அழகானது 
என்றேன்

Wednesday, June 4, 2014

இன்றைய நாள்

வலிக்கவே செய்கிறது
இந்த பிரிவு
என்கிற உன் குறுஞ்செய்தியும்
அதை நீக்கவே
வரப்போகிறது
ஒரு சந்திப்பு
என்கிற என் குறுஞ்செய்தியும்
நம் இன்றைய நாளை
நிறைவு செய்கின்றன

Monday, June 2, 2014

உன்னை எழுதி வைத்தேன்

உன்னை 
எழுதி வைத்தேன் 
காற்று 
எடுத்துப் போய் விட்டது 
தாளில் 
உன் நினைவுகளும் 
காற்றில் 
உன் பாடல்களும் 

Wednesday, May 21, 2014

பெயர்கள்

நிறைய பெயர்களை 
யோசித்து வைத்திருந்தார்கள் 
இறந்தே பிறந்தது குழந்தை

கண்களில்

உற்றுப் பார்த்தவன் 
கண்களில் 
மிருகம் அசைவதை 
கடைசியில் அவள் 
தெரிந்து கொண்டாள் 
அடுத்த நிறுத்தத்தில் 
அவசரமாய் 
இறங்கிக் கொண்டாள்

Thursday, May 8, 2014

விழித்திருந்தேன்

நீ விட்டுச் சென்ற 
கனவில்தான் 
உறங்கினேன் 
மற்றபடி 
விடியும் வரை 
விழித்திருந்தேன்

Wednesday, May 7, 2014

எவ்வளவோ இருக்கிறது

ரயிலிலிருந்து 
இறங்கிப் போகும் 
பெண்ணுக்கு சொல்ல 
என்னிடம் 
எதுவும் இல்லை 
அவள் அழகிடம் 
சொல்ல 
எவ்வளவோ இருக்கிறது