Sunday, November 2, 2014

பூங்கொத்து

இதழ்களைப் பிய்த்து
எறிந்து கொண்டிருக்கிறாய்
இறந்து கொண்டிருக்கிறது
நான் தந்தப் பூங்கொத்து

Wednesday, October 1, 2014

வேறெங்கோ

உன் மனதில்
ஒளிந்து கொண்ட என்னை
கண்ணாமூச்சி விளையாட்டில்
வேறெங்கோ
தேடிக் கொண்டிருக்கிறாய்

Tuesday, September 30, 2014

மூன்று கவிதைகள்

1-
ஆழ்மனதில் 
அடித்த அலை 
கடலாகிப் போச்சு

2-
சொல்லக் கதைகள் 
இருக்கின்றன
சொற்களில்தான் 
கோர்க்கத் தெரியவில்லை

3-
வெயில் போல் 
புன்னகைக்கிறாய் 
மழைப் பெய்கிறது

இருக்கிறது

உன் கண்களில் 
அன்பு இருக்கிறது
உன் பார்வையில் 
தாய்மை இருக்கிறது

சொற்கள் இருந்தன

நாம் விடை பெற்ற 
பிறகும் 
பேச 
சொற்கள் இருந்தன 
கண்ணீரில் 

Wednesday, August 6, 2014

வண்ணங்களின் நதி

உன் கண்களில் 
வண்ணங்களின் நதி
அதில் மிதந்து போகும் 
ஓவியங்களில் ஒன்றை  
எடுத்துக்கொள்ளப் பார்க்கிறேன்

உன் பார்வை

என் மேல்
விழுகிறது
உன் பார்வை
நீ எடுத்துக் கொள்ளாமல்
போகிறாய்
நான் எடுத்துக் கொண்டு
போகிறேன் 

Tuesday, August 5, 2014

ரகசிய மலர்

நீ என் அந்தரங்கத்தின்
ரகசிய மலர்
எனக்கே தெரியாமல்
பூக்கிறாய்
உதிர்கிறாய்

Monday, August 4, 2014

சுழன்று சுழன்று

சுழன்று சுழன்று
இசைத்தட்டாகிறேன்
நீ இசையாகிறாய்

Saturday, August 2, 2014

தருவாயா

உன் நெற்றிப் பொட்டில்
ஒட்டி இருக்கிறது
கவிதையின் ஒரு சொல்
எழுதி முடிக்க
எடுத்துத் தருவாயா

மேலும் அழகாக

நீ வெட்கத்தால் அழகை
சரி செய்துகொள்ளும்
பெண் என்றேன்
சிரித்தாய்
மேலும் அழகாக

Sunday, July 6, 2014

நிழல் விரிந்து

உன் நிழல் விரிந்து 
சமுத்திரத்தை 
மூடி விட்டது 
அதில் நானும் 
ஓய்வெடுக்கிறேன் 
அலைகளில் 
கால் நனைத்தபடி

Friday, June 27, 2014

இசைத்தட்டு

உன் பெயரில் 
சுழல்கிறது 
இசைத்தட்டு 
உன் பெயரை 
இசைத்தபடி

Thursday, June 26, 2014

அவள் இசை

சுடரை ஊதி 
அணைத்தக் குழந்தை 
கைத்தட்டுகிறாள் 
இருள் 
அவள் இசையை 
ரசிக்கிறது 

Saturday, June 14, 2014

வழியில்

பள்ளி விட்டுப் 
போகும் வழியில் 
மரத்திற்கு 
முத்தம் தந்து
போகிறாள் மான்யா
மரம் முத்தங்களை 
சேமித்து வைக்கிறது 

Thursday, June 12, 2014

அருகில்

உன் அருகில் 
நிற்கிறேன் 
பேருந்து வர 
போகிறாய் 
இப்போது 
உன் அருகில் 
இன்னும் நெருக்கமாக 
நிற்கிறேன் 

Tuesday, June 10, 2014

அழகானது

தாமதமாக வந்து 
காத்திருப்பது அழகானது 
என்றாய் 
நீண்ட காத்திருப்பு 
மிக அழகானது 
என்றேன்

Wednesday, June 4, 2014

இன்றைய நாள்

வலிக்கவே செய்கிறது
இந்த பிரிவு
என்கிற உன் குறுஞ்செய்தியும்
அதை நீக்கவே
வரப்போகிறது
ஒரு சந்திப்பு
என்கிற என் குறுஞ்செய்தியும்
நம் இன்றைய நாளை
நிறைவு செய்கின்றன

Monday, June 2, 2014

உன்னை எழுதி வைத்தேன்

உன்னை 
எழுதி வைத்தேன் 
காற்று 
எடுத்துப் போய் விட்டது 
தாளில் 
உன் நினைவுகளும் 
காற்றில் 
உன் பாடல்களும் 

Wednesday, May 21, 2014

பெயர்கள்

நிறைய பெயர்களை 
யோசித்து வைத்திருந்தார்கள் 
இறந்தே பிறந்தது குழந்தை

கண்களில்

உற்றுப் பார்த்தவன் 
கண்களில் 
மிருகம் அசைவதை 
கடைசியில் அவள் 
தெரிந்து கொண்டாள் 
அடுத்த நிறுத்தத்தில் 
அவசரமாய் 
இறங்கிக் கொண்டாள்

Thursday, May 8, 2014

விழித்திருந்தேன்

நீ விட்டுச் சென்ற 
கனவில்தான் 
உறங்கினேன் 
மற்றபடி 
விடியும் வரை 
விழித்திருந்தேன்

Wednesday, May 7, 2014

எவ்வளவோ இருக்கிறது

ரயிலிலிருந்து 
இறங்கிப் போகும் 
பெண்ணுக்கு சொல்ல 
என்னிடம் 
எதுவும் இல்லை 
அவள் அழகிடம் 
சொல்ல 
எவ்வளவோ இருக்கிறது

Monday, April 28, 2014

தனித்தனியே

சந்திக்க வேண்டிய 
நாம் 
தனித்தனியே 
காத்திருக்கிறோம் 
யாருக்கு 
எதற்கு 
ஏன் 
என்று தெரியாமல்

Wednesday, April 23, 2014

தலையணை மெளனம்

உன்
தலையணை மெளனம் 
பிடித்திருக்கிறது

அவன்

ரயில் பெட்டியில் 
எல்லோரும் 
குழந்தைகளாக இருந்தார்கள் 
அவன் குழந்தையாக 
முயற்சி செய்து கொண்டிருந்தான்

சித்திரம்

நான் உன் கண்ணுக்குள் 
இருக்கும் சித்திரம் 
கண்ணீரில் 
வழிய விடாதே 
பிரியும் போது 
அவள் சொன்னாள்

Saturday, March 22, 2014

ஒட்டி இருப்பது

இந்த முத்தத்தை 
எப்படி எல்லாம் தரலாம் 
என்று செய்த 
ஒத்திகையில் 
தேங்கிய சுவாரஸ்யம் 
நீ வந்தவுடன் 
வடிந்து விட்டது 
இப்போது
மனதிலும் 
உதட்டிலும் 
ஒட்டி இருப்பது 
பதட்டம்தான்

Tuesday, March 18, 2014

முதல் முத்தம்

முதல் முத்தம் 
வாசல் திறந்தது 
இப்போது 
வருவதும் போவதுமாய்
முத்தங்கள்

Monday, March 17, 2014

நீ படிப்பது

நீ படிப்பது 
என் சொற்களை 
உன் கண்கள் 
அணிந்து பார்ப்பது 
போலிருக்கிறது

Wednesday, March 12, 2014

நம்மை பார்த்து பெய்கிறது மழை

வெட்கத்துடன்
நான் தந்த முத்தத்தை
வாங்கிக் கொண்டாய்

தயக்கத்துடன்
நீ தந்த முத்தத்தை
பெற்றுக் கொண்டேன்

மயக்கத்துடன்
நம்மை பார்த்து
பெய்கிறது மழை

Monday, March 10, 2014

ஒரு சொல்

உன் மெளனத்தை 
செதுக்கி செதுக்கி 
கண்டேன் 
காதலெனும் 
ஒரு சொல்

Tuesday, March 4, 2014

கால் சலங்கை

கனவில் 
கால் சலங்கையைக் 
கட்டிவிட்டுப் போயிருக்கிறாய்
குதித்து குதித்து 
ஆடிக்கொண்டிருக்கிறது

Thursday, February 20, 2014

வசீகரம்

உன் சின்னஞ்சிறு பெயரை 
இசை போல் 
உச்சரிக்கும் போது 
அதற்கு ஒரு 
வாக்கியத்தின் வசீகரம் 
வந்து விடுகிறது

Wednesday, February 19, 2014

வெட்கத்தால் வரைந்து பார்க்கிறேன்

1-
நூல் பிடித்தது போல் 
உன்னால் 
பேசிவிட முடிகிறது
எனக்குத்தான் 
பட்டம் போல் 
அலைபாய்கிறது

2-
என் தனிமைக்கு 
உன் நினைவுகள் போதும் 
எனக்கு 
எந்த மது போதாது 

3-
போகச் சொல்கிறாய்
வழி 
நீளமாகி விட்டது

4-
உனக்குத் தரப்போகும் 
முத்தத்தை வெட்கத்தால் 
வரைந்து பார்க்கிறேன்

5-
கால் நனைக்கும் 
அலை போல 
உன் மனம் நனைக்கும் 
என் பிரியம்

6-
கடலை ஒரு துளியாக்கி 
அதை உன் கண்ணில் 
ததும்பச் செய்கிறாய்




Sunday, February 16, 2014

சொற்கள் இல்லை

உள் புதைந்த 
மெளனம் 
ஓராயிரம் கதை 
வைத்திருக்கும் 
அதைச் சொல்ல 
சொற்கள் இல்லை 
என்னிடம்

சொல்

நீ என்னிலிருந்து 
வெட்டி எடுக்கும் 
சொற்களிலிருந்து 
கசிவது
குருதியா 
காதலா 
நானா 
சொல்

Saturday, January 25, 2014

நீ இருந்தாய்

ஏதோ ஒரு கனவில் தலை சாய்த்துக் கொண்டேன் அங்கு நீ இருந்தாய் தாலாட்ட

Friday, January 10, 2014

அவ்வளவுதான்

நீ என்னை வந்தடைய 
எத்தனையோ 
பாதைகள் உள்ளன 
இன்னும் 
ஒரே ஒரு பாதை
உன் மனதிலிருந்து 
உருவாக வேண்டும் 
அவ்வளவுதான்