Friday, April 10, 2009

நீண்ட காலம்

நீண்ட காலமாக நாம்
பேசிக் கொண்டிருந்தோம்
காலத்தில் பதிவாகும்படி
பேசவே இல்லை

Friday, April 3, 2009

அடிக்கடி நினைவுகளில்
உன்னை தொலைத்து விடுகிறேன்
வேறு சில நினைவுகளில் வந்து
நீயே சேர்ந்து கொள்கிறாய்

மீட்டெடுத்தல்

நான் எழுத
மறந்து போன கவிதையை
நீ திரும்ப சொன்னாய்
அழகாக

பின்னொரு நாளில்
மீண்டும் கேட்டபோது
அது உனக்கும்
மறந்து போயிருந்தது

ஆயுள் கெட்டியான
கவிதை எனில்
அது மறதியை
ஜெயித்து வாழும் என்றேன்

நீ சிரித்தபடியே
சொல்லிப் பார்த்தாய்
அதே கவிதையை
உனது வார்த்தைகளில்

என் மறதிக்குள்
புதைந்து போன
கவிதையின்
முதல் சொல்
ஒரு செடிபோல்
எட்டிப் பார்த்தது
பின் முழுதும் வந்தது

நம்மை மீட்டெடுத்தது கவிதையா
நாம் மீட்டெடுத்தது கவிதையா
என்று இதன் பிறகு
பேசத் தொடங்கினோம்
மழை அள்ளி விளையாடும்
குழந்தைகளைப்போல

Saturday, March 28, 2009

முகங்கள்

நீ வருவதாக
சொன்ன ரயிலில்
வந்து சேரவில்லை
எல்லோரும்
இறங்கிப் போகிறார்கள்
உன் முகத்தை
அணிந்தபடி
--------------------------------

Monday, March 9, 2009

அழகு

அழகாக இருக்கிறது
என் வார்த்தைகளுக்கிடையில்
உன் மெளனத்தை
வைத்துப் பார்ப்பது

Sunday, March 8, 2009

உனக்கு

என் மீது
உனக்கு நம்பிக்கை
வந்த பிறகு
காதலை சொல்லலாம்
என்றிருந்தேன்
காதலே ஒரு
நம்பிக்கை
என்பதை உணராமல்
தொலைந்த உன் கைக்குட்டை
கண்டுபிடித்தது
என்னை