Wednesday, July 22, 2009

புறாக்கள்

எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள்
தாத்தாவுக்கு மட்டும்
ஓடி வரும்
அருகில் வந்து தின்னும்
நாங்கள் கேட்டபோது
சொன்னார் தாத்தா
அடுத்த முறை தானியத்தில்
அன்பைத் தடவி
போட்டுப் பாருங்கள் என்று

Tuesday, July 21, 2009

முகவரி

நதியிடம் முகவரி கேட்டேன்
வழியெல்லாம் என் விலாசம்தான்
படித்துக் கொண்டே வா என்றது

Saturday, July 18, 2009

நாம் காதலுக்கு வெளியே
சந்தித்துக் கொண்டோம்
பின் காதலுக்குள்ளே பேசியதை
பேச ஆரம்பித்தோம்

Monday, July 13, 2009

கடைசி வரை

கடைசி வரை
கண்ணாடி போடாமல்
தாத்தா வாழ்ந்ததாக
அப்பா சொல்வார்

எப்படி என்று
கேட்கும்போதெல்லாம்
புன்னகைத்தபடியே
போய்விடுவார்

நெடு நாள் கழித்து
தாத்தாவிடம் பெற்ற பதிலை
ஒரு நாள்
தாத்தா போலவே
அப்பா சொன்னார்

அட போடா நான் அன்பால
எல்லாத்தையும் பாக்கறேன்
அதான் தெளிவாத் தெரியுது

படகும் மீனும்

படகு கேட்டது மீனிடம்
நான் உன்னைப் போல்
நீந்த வேண்டும்

மீன் சொன்னது படகிடம்
நான் உனனைப் போல்
மிதக்க வேண்டும்

பதில்கள்

நீ பதில் சொல்வது
என் கேள்விக்குப் போதுமானது

நீயே பதிலாவது
என் வாழ்க்கைக்குத் தேவையானது

Saturday, July 11, 2009

சமாதானம்

குடை எடுத்து வராத பெரியவர்
எப்போது நிற்கும் என்கிறார்

பின் நிற்பவர்களைப் பார்த்து
அவரும் ரசிக்க முயற்சித்து
அதுவாய் நிற்கும்
என்று சமாதானம்
சொல்லிக் கொள்கிறார்